பரமக்குடி பகுதியில் தெருநாய்கள் அடித்து கொலையா? – வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
பரமக்குடியில் நகராட்சி பிடித்து சென்ற நாய்களை அடித்து கொன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதிகளில் அதிகமான தெரு நாய்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் திரிகின்றன. இவைகள் அனைத்தும் தெரு பகுதிகளில் விளையாடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடித்து வருகிறது.
இதனால் அதிகளவில் வந்த புகாரின் அடிப்படையில், நேற்று நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து பொன்னையாபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் விடுவதற்காக கொண்டு சென்றுள்ளனர்.
நாய்களின் கால்கள் கட்டப்பட்டு கொண்டு செல்வதைப் பார்த்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து,புளூ கிராஸ் அமைப்பினர் விசாரித்த போது நகராட்சி அதிகாரிகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதனால் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.