முன்மாதிரி கிராமமாக நீலகிரியின் பனகுடி கிராமம் தேர்வு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள பனகுடி கிராமம் மேம்படுத்தபட்ட தொழில்நுட்பத்தின் மூலம் முன்மாதிரி பழங்குடி நன்னீர் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், குறும்பர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பனியர் ஆகிய ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், தங்களுக்கென்று தனி கலச்சாரத்தை கொண்டு வசித்து வருகின்றனர். தோடர் மற்றும் கோத்தர் போன்ற பழங்குடியின மக்கள் ஓரளவு மேம்பாடு அடைந்தாலும், இன்னும் சில பழங்குடியின மக்கள் மிகவும் பின் தங்கியே உள்ளனர். இவர்களுக்கு குடியிருப்புகள், சுத்தமான தண்ணீர் மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை. பல கிராமங்களில் பனியர், இருளர் மற்றும் காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியின மக்கள் கஷ்டப்பட்டே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோத்தகிரி அருகேயுள்ள பனகுடி பழங்குடியின கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்க பல்வேறு அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு அவர்களின் இல்லங்களுக்கே சுத்தமான தண்ணீர் கொண்டுச் சென்றுள்ளது. இந்த சுத்தமான குடிநீர் குழாய்கள் மூலம் கடந்த ஒராண்டாக வழங்கி வருகிறது.

இந்த முன்மாதிரி நன்னீர் கிராமம் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி துவக்கப்பட்டது. திட்டத்தை துணை கலெக்டர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார். மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பாவின், தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்திய அரசின் உலகளாவிய சிறப்பம்சம் பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் புதுமையான ‘நுண் வடிதல் சவ்வு’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பனகுடி கிராமம் அதன் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான கிருமிகள் இல்லாத, சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான முன்னோடி மாதிரி பழங்குடி கிராமமாக மாறியுள்ளது. இந்த நுண் வடிதல் சவ்வு சுத்திகரிப்பு உபகரணம் பஞ்சாயத்து அல்லது பிற ஆதாரங்களின் மூலமாக பெறப்படும் குடிநீரின் மொத்தக் கரைந்த திடப்பொருட்கள் அளவு, இந்திய தரக்கட்டுபாட்டின் இணக்கத்திற்குட்பட்ட குடிநீரை சுத்திகரிக்க பயன்படுத்தபடும் எதிர்திசை சவ்வூடு பரவல் முறைக்கு ஒரு வலுவான மாற்று தொழில் நுட்பமாகும்.

மேலும் ஜாக்கனாரை பஞ்சாயத்து மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பனகுடி பழங்குடி கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது. கோத்தகிரியை சேர்ந்த ஜேசிஐ., அமைப்பு, நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம், அனைத்து பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனமும் பனகுடி கிராமத்தை தத்தெடுத்து கிருமி இல்லாத, சுகாதாரமான சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கு துவக்க முயற்சி செய்துள்ளனர். இதற்கு தேவையான நிதி உதவிகளை திரட்டி, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தனித்தன்மை வாய்ந்த நுண் வடிதல் அடிபடையிலான ஆன்லைன் குடிநீர் சுத்திகரிப்பான்களை நிறுவியது. திருப்பூரில் உரிமம் பெற்ற இளம் தொழில் முனைவோரால் சுத்திகரிப்பான்கள் தயாரிக்கப்பட்டன. கோவை பாரதியார் பல்கலைகழகம் நீர் பகுப்பாய்வுக்கான ஆதரவை வழங்கியது.

இதில் பனகுடி பழங்குடியினர் கிராமத்தில் பொருத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பான்களை கடந்த ஒராண்டாக தொடர்ந்து இயக்கி பராமரித்து குழாய் மூலம் கிருமி இல்லாத சுகாதாரமான ஆரோக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பெற்று தமிழகத்தின் முதல் மாதிரி பழங்குடி கிராமமாக திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *