10.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதி மன்றம்

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தச் சட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள்தொகை புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து, கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது என்றும், அந்த ஆணையம் தனது பணியைத் தொடங்குவதற்கு முன் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு அரசியல் காரணங்களுக்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

சாதிவாரி புள்ளிவிவரங்களைப் பெறுவதற்கு நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்திற்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதமான, 50 சதவீதத்தை வன்னியர்களுக்குக் கொடுத்துவிட்டால் மீதம் உள்ள சாதியினர் பாதிக்கப்படுவர் என்பதால் சட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மதுரைக் கிளையில் இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *