பாஜக கேட்கும் தொகுதிகள் கொடுக்கப்படுமா?
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நடக்கும் நிகழ்வுகளை எதிர்கொள்வது, பாஜக அதிமுகவின் முக்கியத் தொகுதிகளை கேட்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி அதிமுகவின் நிலையை கீழ்மட்ட அளவில் கொண்டு செல்ல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக பிரதான கட்சிகளாக மகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தரப்பில் மீண்டும் மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 23 தொகுதிகளுக்கு ஒப்பந்தம்போட்டு கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஆனால் அதே அளவு தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என தேமுதிகவும், அதிக தொகுதிகள் வேண்டும், அதுவும் நாங்கள் சொல்லும் தொகுதிகளையே தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜகவும் நிர்பந்தம் கொடுத்து வருகின்றன.
கூட்டணி வெற்றிக்கு பெரிய பிரச்சினையாக சசிகலாவும் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இதனால் அதிமுகவுக்குள் இருந்த குழப்பம் நீங்கினாலும் தேமுதிக, பாஜக கூட்டணியை இறுதிப்படுத்தினால் மட்டுமே நிம்மதி என தலைமை நினைக்கிறது. குறிப்பாக பாஜக கேட்கும் பல தொகுதிகள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் தொகுதிகள் என்பதால் கட்சித்தலைமைக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது.
நேர்க்காணலில் வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதை பெயருக்கு நடத்திய அதிமுக தலைமை இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என திடீரென அறிவித்தது.
இன்று காலையில் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இது தவிர வழிகாட்டுக்குழு நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தொகுதிகள் பிரிப்பு, கூட்டணிக்கட்சிகளின் நெருக்கடி, தற்போதுள்ள யதார்த்த சூழ்நிலை, பாஜக கேட்கும் அதிமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கருத்தை தலைமை கேட்டதாகவும், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.