டிஜிபி மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; விசாரணை அதிகாரிகள் நியமனம்

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் டிஜிபி  ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி சில மணி நேரத்தில் மாற்றப்பட்டு வேறொரு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

சிறப்பு டிஜிபி  (சட்டம்- ஒழுங்கு) என்கிற காவல் துறையின் உயரிய அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட டிஜிபி  ராஜேஷ்தாஸ், பெண் எஸ்.பி.யிடம் அத்துமீறிப் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதால் சர்ச்சை எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை இன்னொரு எஸ்.பி. கண்ணன் என்பவரை விட்டு மிரட்டியதாகத் தகவல் வெளியானது.

இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்தனர். ஐபிஎஸ் அதிகாரிகளுக்குள்ளும் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. இதையடுத்து, கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. ராஜேஷ்தாஸ் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக நடக்க வேண்டும் என ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜேஷ்தாஸ் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 341- (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 354 A (2)-பாலியல் துன்புறுத்தல், 506 (1)- கொலை மிரட்டல், 4 (எச்) of TN (prohibition of harassment of women act) பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. சில மணி நேரத்தில் அதில் மாற்றம்  செய்யப்பட்டு, விசாரணை அதிகாரியாக எஸ்.பி அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *