பாஸ்ட் டேக் வசூல் 100 கோடியைத் தாண்டியது!
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தி செல்வதால் காலத் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்கள், சுங்கச் சாவடிகளில் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான வாகன உரிமையாளர்கள் அவசர அவசர மாக பாஸ்டேக் பெற்றனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
”பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 2 வாரங்களில் மட்டும் 20 லட்சம் பேர் புதிதாக பாஸ்டேக் எடுத்துள்ளனர்.
இதன்மூலம் இதுவரை 2.8 கோடி வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்டேக் முறை அமல்படுத்தப் பிறகு தற்போது தினமும் வசூலாகும் சுங்க கட்டணம் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது.கடந்த 25-ம் தேதி சுங்க கட்டணம் பாஸ்டேக் மூலம் ரூ.103.94 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது. பாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.