கல்லூரியின் காவலனுக்கு கண்ணீருடன் இறுதியஞ்சலி!

திருச்சி பெரியார் ஈ.வே.ரா. அரசுக் கல்லூரி விலங்கியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர் தமிழரசன். இவர், பொது வாழ்வில் ஈடுபட எண்ணி கடந்த ஒருவருடம் முன்பு கல்லூரி பணியைவிட்டு விலகினார். அவர் அந்த கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் கல்லூரியில் வளர்ந்த நாய்களும் இவரின் அன்பைப் பெற்றவையாக மாறின. அதில், அவர் பெயரிட்ட ‘டோரா’ என்ற ஒரு பெண் நாயும் உண்டு.

கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நட்புடன் உலா வந்த டோரா, இன்று காலை திடீரென்று மரணமடைந்தது. பேராசிரியர் தமிழரசன் கல்லூரிப் பணியில் இருந்து விடுபட்டுச் சென்றாலும், அவர் கல்லூரி அருகே 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காஜாமலை கடைவீதி பகுதிக்கு வரும்போது, தன் மோப்ப சக்தியால் அதை உணர்ந்த டோரா, அவர் இருக்குமிடம் சென்று அழுது புலம்பி பாசத்தை வெளிப்படுத்தும்.

கல்லூரி மாணவர்கள் சிலர் கூறும் போது, “பல வருடங்களாக எங்கள் கல்லூரியில் வளர்ந்த டோரா, கல்லூரியில் எந்தத் துறை கட்டிடத்தில் விழா, கருத்தரங்கு நடந்தாலும் அங்கே வந்து வாசலில் உரிமையோடு நின்றுகொள்ளும். விழா முடிந்த பிறகே அங்கிருந்து அகலும். வணக்கம் வைக்கச் சொன்னால் கால்களை மடக்கி மண்டியிட்டு வணக்கம் வைக்கும். இதுபோல், சொல்வதை எல்லாம் கேட்கும் அதன் திடீர் மரணம் எங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது” என்றனர்.

நன்றியுள்ள ஜீவன் டோராவின் மரணத்தைக் கேட்டு, மன்னார்குடியில் இருந்து திருச்சி வந்த பேராசிரியர் தமிழரசன் மற்றும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து கல்லூரி தோட்டத்தில் டோராவை அடக்கம் செய்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *