அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 19ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை என பரபரப்பாகி உள்ளன.

ஏற்கெனவே,  திமுக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு சுற்று தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.

இந்நிலையில், அதிமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

சென்னை க்ரீம்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

முன்னதாக இந்த சந்திப்பு குறித்து கிஷன் ரெட்டி கூறுகையில், எந்தெந்த தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  இன்று சென்னை வரவிருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அமித் ஷா அதிமுக, பாமக, தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். நாளை அவர் புதுச்சேரி செல்கிறார்.

இதற்கிடையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 35 முதல் 40 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாஜகவுக்கு 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தலைமை கூறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க தென் மாவட்டங்களில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொகுதியான சிவகங்கை, அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டியிட விரும்பும் தொகுதியான காரைக்குடி ஆகியவற்றை பாஜகவினர் கேட்டு வருகின்றனர்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தொகுதியான ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் சீனிவாசனின் தொகுதியான திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளையும் பாஜக கேட்டு வருகிறது. இவை தவிர, அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி உள்ளிட்ட தொகுதிகளையும் பாஜக கேட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமெனவும் பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…

அதானியும், பாஜகவும் ஒன்றா?  பிரதமர் ஏன் பொங்குகிறார் கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில்  நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு…