தமிழக எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம் – ராதாகிருஷ்ணன்

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் பகுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவியது. இதைக்கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில் நேற்றைய தினம் திடீரென கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் கொரோனா 2வது அலை ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை அயோத்தியா நகரில் மாவட்ட அளவிலான காசநோய் கணக்கெடுக்கும் பணியை தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள-தமிழக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.