கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்குப் பின் முடிவு செய்யப்படும் – எல். முருகன்
பாஜக சார்பில், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சார இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் பாஜகவின் மாநிலத் தலைவர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், “தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை மிகவிரைவில் தொடங்கும். பாஜகவின் தேர்தல் அலுவலகங்கள் 234 தொகுதிகளிலும் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாஜகவின் தேர்தல் பணி தொடங்கியுள்ளது. தென்மாவட்டங்களில் பிரதமர், தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு அதிகளவில் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. தங்களது எம்.எல்.ஏ.வைக் கூட தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தேர்தலுக்குப் பின்னர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். கடந்த 5 ஆண்டுகளாக காவிரி நீர் எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.