புதுப்பொலிவு பெறும் கொளவாய் ஏரி
செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியினை 60 கோடி மதிப்பில் புனரமைத்து, சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் தேவையை மேம்படுத்தும் திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செங்கல்பட்டு கொளவாய் ஏரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
2210 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியைத் தூர்வாரி, சென்னைக்கு நீரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், படகு குழாம், பூங்கா, அருவி, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட உள்ளன ஏரி கரையை சுற்றிலும் பொதுமக்கள் நடந்து செல்ல வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும் ஏரியின் மையப்பகுதியில் 3 இடங்களில் தீவுகள் அமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. ஏரிக்கு வரும் அனைத்து நீர்வரத்து கால்வாய்களும் சீரமைக்கப்பட உள்ளன.
தவிர, கோட்டையைச் சீரமைத்து கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகள் பழைய நிலைக்கு மாற்றப்பட உள்ளன.
செங்கல்பட்டு சிறப்புகளை விளக்கும் புகைப்படக்காட்சி அமைக்கவுள்ளது. இதனால், கொளவாய் ஏரி புதுப்பொலிவைப் பெற்று ஒரு சுற்றுலாத்தலமாக மீண்டும் மாறும் என்று எதிர்பார்க்கலாம்.