இது புதுசா இருக்கே… கருப்பு கேரட்டை விளைவிக்கும் கொடைக்கானல் விவசாயி!

கொடைக்கானலில் ஆப்கானிஸ்தானின் கருப்பு நிற கேரட்டை விவசாயி ஒருவர் விளைவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கொடைக்கானல் மலையில் கேரட், உருளைக் கிழங்கு, மலைப் பூண்டு, சவ்சவ் உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன. கொடைக்கானல் பாம்பார்புரம் விவசாயி ஆசீர், சீனாவில் கருப்பு வண்ணத்தில் கேரட் விளைவிக்கப்படுவதை அறிந்து, அதை கொடைக்கானலில் பயிரிட விரும்பினார்.

இதையடுத்து கருப்பு நிற கேரட்டுக்கான விதைகளை ஆன்லைன் மூலம் வாங்கினார். கொடைக்கானல் சீதோஷ்ண நிலையைவிட சீனாவில் அதிகக் குளிர் பிரதேசத்தில் கருப்பு நிறகேரட் பயிரிடப்படுவதை அறிந்தார். இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு இப்பயிர் விளைச்சல் தருமா என்று சந்தேகம் வர, பரீட்சார்த்த முறையில் ஐந்து சென்ட் இடத்தில் மட்டும் கருப்பு நிற கேரட் பயிரிட்டார். ஆரஞ்சு நிற கேரட் 90 நாட்களில் விளையும். அதேபோல், கருப்பு நிற கேரட்டும் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாரானது. மண்ணுக்குள் இருக்கும் கேரட்டை தோண்டிப் பார்த்தபோது, நல்ல விளைச்சல் கண்டிருந்தது.

இந்த கேரட்டின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான் என்று சொல்லப்படுகிறது. அங்கு விளையும் கருப்புநிற கேரட்டின் சுவை அதிகமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் இருக்கும்.

இனிப்புடன் லேசாகக் காரம் கலந்த சுவை இருக்கும். கருப்பு கேரட்டில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. அதிகம் செறிவூட்டப்பட்ட அந்தோசியனின் என்ற நிறமியால் அதன் வண்ணம் கருப்பாக உள்ளது. கருப்பு கேரட் விளைந்துள்ளதை அறிந்த மற்ற விவசாயிகள் பாம்பார்புரம் தோட்டத்துக்கு வந்து ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *