நீதியின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும்… கமல்ஹாசன் அறிக்கை!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் கண்டன குரல்கள் அதிகமாகி வருகின்றன.
அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, நடந்தாய் வாழி காவிரி என்று பாடும் நம்மை நின்றாய் நீ காவிரி என்று வாடும் நிலைக்கு தள்ளுகிறது கர்நாடகா. தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கெனவே கர்நாடகா பல அணைகளைக் கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையை கட்டி தமிழக விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இரு மாநிலங்களின் நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்க்கவேண்டிய மத்திய அரசு அதை உணரவில்லை.
அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்னையில் கர்நாடகா பக்கம் மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. மேகதாது விவகாரத்தில் இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளார்.