கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தைத் தடுக்க வைகோ கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களில் விலை தொடந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் தற்போது விலை ஏற்றத்தால் கட்டுமானங்களைத் தொடர முடியாத நிலை உள்ளது.

இந்த விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா பேரிடர் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பொது முடக்கம் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடர முடியாத நிலையில், இலட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கட்டுமானப் பணிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகும்.

கொரோனா பெருந்தொற்று, தமிழ்நாட்டு அரசின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நடுத்தர எளிய மக்களின் பொருளாதாரத்தையும் சூறையாடி இருக்கிறது. இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம் அதிர்ச்சி தருகிறது. சில்லரை விற்பனையில் 410 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது ரூ.470 – 520 ஆக அதிகரித்துள்ளது.

இரும்புக் கம்பி ஒரு கிலோ ரூ. 60 லிருந்து ரூ. 70 – 75 ஆகவும், ரூபாய் 3600க்கு விற்கப்பட்ட எம்-சாண்ட் ஒரு யூனிட் 4000 ரூபாய் ஆகவும், ரூ.4600க்கு விற்பனையான வி-சாண்ட் ஒரு யூனிட் ரூ.5100 ஆகவும் உயர்ந்துள்ளது. 23 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல் 28 ஆயிரம் ரூபாயாகவும், 3 யூனிட் கருங்கல் ஜல்லி ரூ. 8500 லிருந்து ரூ. 9500 ஆகவும் அதிகரித்துவிட்டன. சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் எந்த அடிப்படையில் விலையை உயர்த்தி வருகின்றன? என்ற கேள்வி எழுகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்ட முடியாது. ஏனெனில் டில்லியில் சிமெண்ட் விலை அதிகபட்சமாக ரூ. 350 ஆகவும், அண்டை மாநிலங்களான ஆந்திராவில் ரூ, 370 முதல் ரூ. 390 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ரூ. 520 அளவுக்கு சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டு இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

சிமெண்ட், கம்பி தயாரிப்பு நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *