முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாழ்நாள் விருப்ப கோரிக்கையை நிறைவேற்ற அர்ச்சகர்கள் வேண்டுகோள்

மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படிகிறது. இதனையொட்டி, அவரது பிறந்த நாளில் அவரது வாழ்நாள் விருப்ப கோரிக்கையான , ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், 15 ஆண்டுகளாய் நீதிக்காக காத்திருக்கிறோம்!கோயில் கருவறையில் இருக்கும் தீண்டாமை ஒழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இதற்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தலைவர் வா.ரங்கநாதன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ‘ முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளில் அவரின் வாழ்நாள் விருப்பமான ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் : அனைத்து சாதி அர்ச்சகர் சங்கம் கோரிக்கை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தில் அய்ந்து முறை முதல்வராய் இருந்து தந்தை பெரியாரின் கொள்கைகளை செயலாக்கம் செய்தவருமான அய்யா கலைஞர் அவர்களின் பிறந்தநாள் 03.06.2021 வியாழக்கிழமை அன்று வருகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றபோது, தந்தை பெரியார் கோரிக்கையின்பேரில் உருவானதே அனைத்து சாதி அர்ச்சகர் என்ற மாபெரும் தீண்டாமை ஒழிப்பு சமுக நீதிப் புரட்சி ஆகும்.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக அய்யா கலைஞர் அவர்களின் உத்தரவின்பேரில் உருவானதே இந்துசமய அறநிலையத்துறையில் பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிப்பு திருத்தச் சட்டம் என்பது.கலைஞரின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்கள். சேசம்மாள் என்று சொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “ பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டது சரி – ஆனால் ஆகமத்திற்கு முரணாக வேறு சாதியினர் தொட்டால் சாமி சிலை தீட்டுப்பட்டுவிடும் – எனவே ஆகமத்தை மீறக்கூடாது என்றனர்.

உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தடை சுமார் 35 ஆண்டுகள் நீடித்தது.இடையில் ஆண்ட அதிமுக அரசு அர்ச்சகர் பிரச்சனையில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் கடந்த 2006-ல் அனைத்து சாதி அர்ச்சகர் அரசாணை வெளியிட்டு 23.05.2006 – ஆம் தேதி இடப்பட்ட அரசாணை அரசு (நிலை) எண்:118-ஐ வெளியிடப்பட்டது. ஆகிய அனைத்து சாதி அர்ச்சக மாணவர் பள்ளிகளையும் திறந்தார். அப்பள்ளிகளில் முறையாக அனைத்து மந்திரங்கள், பூசைகள், ஆகமங்கள், திருமந்திரங்கள் பயின்று தீட்சையும் பெற்று 207 மாணவர்கள் ஆகமக் கோயில்களில் அர்ச்சகப் பணிக்கு தயாரானோம்.

அதற்கும் தடை வாங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சார்யார்கள் பல ஆண்டுகள் வழக்கை நடத்தவில்லை. அதன்பின் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விருத்தாசலம் ராஜு மதுரை வாஞ்சிநாதன் முயற்சியில் அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டு கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கருவறை நுழைவு எனப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகள் மற்றும் திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு அளித்தன.

இதன் தொடர்ச்சியாக எங்கள் வழக்கறிஞர்களின் முயற்சியால் உச்சநீதிமன்ற வழக்கிலும் இணைந்து பல லட்சங்கள் செலவழித்து மூத்த வழக்கறிஞர்களை இணைத்து வழக்காடினோம். 2015-ல் தீர்ப்பு வந்து. பிறப்பின் அடிப்படையில் யாரும் அர்ச்சகர் வேலை கோர முடியாது என்று சொன்ன உச்சநீதிமன்றம் அந்தந்த கோயில் மரபுகளின்படி நியமனங்கள் செய்யலாம் என உத்தரவிட்டது. அப்போதிருந்த அதிமுக அரசில் நாங்கள் பலமுறை முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை.

அர்ச்சகர் பணி என்பது ஓர் அரசுப் பணி.அரசு ஊழியர்கள் போல பணிவரன்முறை விதிகளுக்குள் அர்ச்சகர்கள் வருவார்கள்.சேசம்மாள் வழக்கு, 2015 அர்ச்சகர் தீர்ப்புகளின் அடிப்படையில் பரம்பரையாகவோ, பிறப்பின் அடிப்படையிலோ தமிழகத்தில் உள்ள ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்யக் கோரி யாரும் கோர முடியாது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக பரம்பரை அல்லது குறிப்பிட்ட பிராமண சாதியின் ஒரு பிரிவினர் மட்டும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை மாற்றி கோயில்களில் சமத்துவத்தை நிலை நாட்டுவதே அரசியல் சட்டப்படியான அரசின் பணி. அந்த வகையில் தனது அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றுவதாக திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கொரானா பெருந்தொற்றுக்கெதிரான கடும் பணிகளின் ஊடே பேருந்தில் பெண்களுக்கு இலவசம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமனம், நீட் கிடையாது, புதிய கல்விக் கொள்கை தவிர்ப்பு என தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாம், கலைஞரின் வாழ்நாள் விருப்பமாம் ஆகமக் கோயில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை ஜூன்,3,2021 அன்று அய்யா கலைஞர் பிறந்த நாளில் அறிவிக்கக் கோருகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற மிகப்பெரிய கோயில்களில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் பழனி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயில் கபாலீஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் இது போன்ற பெரிய கோயில்களில் ஆகம முறைப்படி இருக்கிற கோயில்களிலும் எங்களுக்கு தகுதி திறமையோடு நாங்கள் பயிற்சி முடித்து இன்றைக்கு தனியார் கோயில்களிலும் தனியாக சில வேள்வி குடமுழுக்கு போன்ற அனைத்து வகையான பூஜை முறைகளையும் செய்து வருகிறோம் அதற்கேற்ப எங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

கோயில் கருவறையில் இருக்கும் தீண்டாமையை ஒழிக்க அரசு தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

எனவே சமூக நீதிக்கான புதிய அரசிடம் கீழ்க்கண்ட
கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

1.அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை ஜூன்,3,2021 அன்று அய்யா கலைஞர் பிறந்த நாளில் அறிவிக்கக் கோருகிறோம்.

2.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய கோயில்கள் – பாடல் பெற்ற தளங்களில் அர்ச்சகர் பயிற்சி முடித்து,தகுதி திறமையோடு இருக்கும் 200 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

3.தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள சைவ , வைணவப் பயிற்சி நிலையங்களை இந்து அறநிலை துறை மீண்டும் தொடங்க வேண்டும்.

4.2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழகஅரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததினை கணக்கில் கொண்டு இந்த வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட வேண்டும்.

5.அர்ச்சகர் பயிற்சி முடித்த 207 மாணவர்கள் அனைவருக்கும் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன பணிநியமனம் கிடைக்கவில்லை ஊக்கத்தொகை வழங்குமாறு கோருகிறோம்.

6.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

7.சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

8.அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஐந்து பேர் இறந்து விட்டார்கள் அவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஒரு அரசுப் பணியும் வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *