சி.பா. ஆதித்தனார் நினைவு நாளுக்கு வைகோ புகழ் வணக்கம்!

தமிழர் தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களின் 40 ஆவது நினைவு நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சென்னை அண்ணா நகரில் உள்ள தமது இல்லத்தில், ஆதித்தனார் படத்திற்கு மலர்கள் தூவி வணங்கினார்.

அதன்பிறகு அவர், ”தமிழர் தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களின் 40 ஆவது நினைவுநாளில், அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம். பத்திரிகை உலகில் வேறு எவரும் செய்ய முடியாத புரட்சியைச் செய்து காட்டினார். வழக்கறிஞராக, மிகப்பெரும் செல்வாக்கையும், செல்வத்தையும் சிங்கப்பூரில் பெற்றார்.

உயிர் தமிழுக்கு.. உடல் மண்ணுக்கு.. என்று முழங்கி, அதன்படியே வாழ்ந்து காட்டினார். அந்தக் காலத்தில் முன்னேறிய சமூகத்தினரின் கைகளில் மட்டுமே செய்தித்தாள்கள் இருந்த நிலையை மாற்றி, தேநீர்க்கடைகளில் தினத்தந்தியைத் தவழச் செய்தார். மாடி வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் அன்றி, குடிசை வீட்டில் வசிப்போரும், ஏழை, எளிய பாட்டாளிகளும் நாள் இதழ்களைப் படிக்கப் பயிற்றுவித்தார்.

உலகச் செய்திகள் முதல் உள்ளூர்ச் செய்திகள் வரை சுவைபடத் தந்தார். அதனால், நாள்தோறும் பத்திரிகை படிக்க வேண்டும் என்ற நிலைமையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவரே ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்கள்தான். அது மட்டும் அல்ல. தமிழ் மண்ணுக்கு உரிமைகள் வேண்டும் என்பதற்காக தனித்தமிழ் மாநாடு ஐம்பதுகளில் தஞ்சையில் நடத்தினார். அந்த மாநாட்டை அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்தான் தொடங்கி வைத்தார்கள். தமிழ் ஈழம் அமைய வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.

கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களை இணைத்துக்கொண்டு, அதை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக நின்றார். அவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்தார். தமிழ்நாட்டிலும் ஓர் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார். ஆனால், தாம் செய்த உதவிகள் எதையும் அவர் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை. அதை நான் நன்றாக அறிவேன்.

குற்றாலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எனது திருமணத்தில் ஐயா ஆதித்தனார் அவர்கள் பங்கேற்று வாழ்த்திச் சிறப்பித்தார்கள். காயாமொழியில் அவரது உருவச் சிலையைத் திறந்து வைக்கும் பெரும் பேறினை, ஐயா இராமச்சந்திர ஆதித்தனாரும், சிவந்தி ஆதித்தனாரும் எனக்கு வழங்கினார்கள்.

ஐயா அவர்களுடைய புகழ், தமிழ் மண்ணில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *