விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதா? சீறும் சீமான்!

ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் இணையதளத்தில் ‘தி பேமிலி மேன்’ என்ற இணையத்தொடர் ஏற்கனவே வெளியாகியது. இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகவுள்ளது. இதில், சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும், இல்லையென்றால் பயங்கர விளைவுகளைச் சந்திக்க வேண்டியது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

பயங்கரவாதிகள் எனக் காட்ட முனைவதா ?ஹிந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் பயங்கரவாதிகள் எனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *