செங்குருதியால் வரலாற்றை எழுதிய தினம்! வைகோ மே தின வாழ்த்து

மே தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பல தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மேதினி போற்றும் மே நாள் என்று, மே முதல் நாளை, உழைப்பாளர் நாளாக உலகமே கொண்டாடி மகிழ்கின்றது.

கடந்த நூற்றாண்டுகளில் தொழிலாளர்கள், பொழுது விடிந்து பொழுது அடையும் வரை மட்டும் அல்ல; அதையும் கடந்து 9 மணி 10 மணி வரை வேலை செய்து வந்தார்கள். அந்த நிலையை மாற்றக் கருதி, ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்றாகப் பகுத்து வரையறுத்து, எட்டு மணி நேரம் வேலை; எட்டு மணி நேரம் உறக்கம்; எட்டு மணி நேரம் வாழ்க்கை நிகழ்வுகள் வகுத்துக் கொண்டு, அந்த நேரம் மட்டுமே வேலை என்று கோரிக்கையை முன்வைத்தனர்.

அதற்காக, அமெரிக்காவின் சிகாகோ நகரில், வைக்கோல் சந்தை சதுக்கத்தில் (Hey Market) அணி திரண்டு களம் கண்டனர்; உரிமை முழக்கங்களை எழுப்பினர். ஆட்சியாளர்களின் அடக்குமுறை கட்டு அவிழ்த்து விடப்பட்டது; காவல்துறையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். நான்கு தொழிலாளர்கள் குண்டடிபட்டுச் செத்தார்கள்.

அவர்களுடைய உயிர்க்கொடையை நினைவு கூர்ந்து, இந்த நாளை, உழைப்பாளர் நாளாகக் கொண்டாடுவது எனத் தீர்மானித்தனர். அன்றைக்கு, அத்தொழிலாளர்கள் தங்கள் செங்குருதியால் எழுதிய வரலாறை, இன்று இந்த நாளில் நாம் நினைவு கூர்கின்றோம்.

செல்வங்களுக்கு எல்லாம் பெரும் செல்வம் என்று கொண்டாடப்படும் மக்கள் செல்வத்தைக் கூடக் கட்டுப்படுத்த முனைகின்ற காலகட்டத்தில், ஒவ்வொருவரும் உழைப்பதற்காகப் பத்து விரல்களைப் பெற்றுள்ளோம். அந்தப் பத்து விரல்களும் இணைந்து செயல்பட்டால்தான் ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும். அதைப்போல, உழைப்பாளர்கள் ஒன்றுபட்டு நின்றால்தான், உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மே நாளை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க, 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கோரிக்கை வைத்தேன். பொது உடைமைக் கட்சிகள் வரவேற்றன; பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தனர். அப்படியே அவர்களுடன் சென்று, இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் பெருந்தகை வி.பி.சிங் அவர்களைச் சந்தித்துக் கோரிக்கையும் வைத்தேன். அவர் உடனே ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டார்.

அந்தச் செய்தியை, அன்று இரவே நான் தலைவர் கலைஞர் அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். மறுநாள் காலை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே நாள் பூங்காவில், மே தின விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைவர் கலைஞர் அவர்கள், “தம்பி கோபாலசாமி, இந்த நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க, முதன்மை அமைச்சர் வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்,” எனத் தெரிவித்துப் பாராட்டினார்கள்.

அப்படிப்பட்ட மலரும் நினைவுகளோடு, திராவிட இயக்கத்தின் வெற்றிக்காகவும், உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி, மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் எனச் சூளுரைத்து, மே நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *