பாஜக கார்ப்ரேட் சேவை போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் – திருமாவளவன்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு விசிக முழு ஆதரவு அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிடவேண்டுமென மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.
மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதிலும்; விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலானோருக்கான கடன்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் வழங்குவதிலும் பொதுத்துறை வங்கிகளே முன்னணியில் நிற்கின்றன.
தனியார் வங்கிகள் நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்படும்போது கிராமப்புற கிளைகளின் மூலம் பொதுத்துறை வங்கிகள்தான் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வருகின்றன.
ஏற்கெனவே 14 பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டதால் வங்கிச் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் மோடி அரசு அறிவிப்புச் செய்துள்ளது.
இதனால், பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதோடு பொதுமக்களுக்கான வங்கிச் சேவையும் சீர்குலையும் சூழல் உருவாகியுள்ளது இதைக் கண்டித்து பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்கும் நோக்கோடு எதிர்வரும் 15, 16 ஆகிய இரு தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் அமைப்புகள் அறிவிப்புச் செய்துள்ளன.
இந்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டும் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.