தேசிய அளவிளான சிலம்பம், சுருள்வாள் போட்டிகளில் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு
கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிளான சிலம்பம், சுருள்வாள், வேல்கம்பு கேடயம் உள்ளிட்ட போட்டிகளில் தமிழக வீரர்கள் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர்.
கோவா மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்கள், ஆண்கள் பிரிவில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் தமிழகம் சார்பில் 12 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட 12 பேர் சிலம்பம், சுருள்வாள், வேல்கம்பு, கேடயம் ஆகியவற்றில் வெற்றி பெற்று தங்க பதக்கமும் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் வென்றனர். இதில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ஏ.ஆர். போட்ஸ் அகாடமி சார்பில் கலந்துகொண்ட 5 பேரில் தனியார் பள்ளி ஆசிரியை பூர்ணிஷா (28) மற்றும் அவரது 7 வயது மகன் திரனேஷ் தங்கம் வென்றனர்.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்று கோவைக்கு ரயில் மூலம் வந்த மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் ஏ.ஆர் போட்ஸ் அகாடமி நிறுவனர் ராஜேந்திரன், மேலாளர் ஜோ மோசஸ் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து சிறப்பான வேற்பு அளித்தனர். இதுகுறித்து சிலம்பம் பயிற்சியாளர் ராஜேந்திரன் கூறுகையில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் தமிழகம் சார்பில் 12 பேர் கலந்து கொண்ட நிலையில் அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி வென்றுள்ளது.
இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது பாரம்பரிய கலைகளை கற்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே சமயம் விளையாட்டு போட்டிகளில் பங்கே வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் செல்வோர்க்கு உதவித்தொகை வழங்கினால் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளையும், விளையாட்டுகளையும் மீட்க முடியும் என தெரிவித்தார்.
தனியார் பள்ளி ஆசிரியை பூர்ணிஷா கூறுகையில் தன்னுடைய மகனை சிலம்பம் வகுப்பில் சேர்க்க சென்றபோது அங்கு மாணவர்கள் சிலம்பம் கற்பதை பார்த்து தானும் அந்த வகுப்பில் சேர்ந்ததாகவும் தற்போது தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று இருவரும் தங்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது பாரம்பரிய கலைகளை மீட்டு எடுத்தால் நம்முடைய கலாச்சாரம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.