இதனால் தான் எனக்கு வாய்ப்புகள் இல்லை; மனம் திறந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் தனக்கு ஏற்படும் காயங்களால் தான் நழுவுகின்றன என்றும், தனது ‘பயோ பிக்’ இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் எனவும் கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் பள்ளியின் விளையாட்டு விழாவில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

“தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கும் பயிற்சி பெறுவதற்குண்டான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சேலத்தில் ஒரு கிராமத்தில் உள்ளவர்களுக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமென்று என்பதற்காகவே நான் எனது சொந்த கிராமத்தில் மைதானம் ஆரம்பித்துள்ளேன். 

நான் கடந்து வந்த பாதை கஷ்டமானது, அதே கஷ்டங்கள் இனி வருபவர்களுக்கு இருக்க கூடாது என்பதே என் நோக்கம். விளையாட்டில் சாதிப்பதற்கு இன்று வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு காயங்களும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். எவ்வளவு திடமாக உடலை வைத்திருந்தாலும் விளையாட்டின் போது  காயம் ஏற்படுவது நம் கையில் இல்லை. ஒவ்வொரு காயத்திலிருந்தும் மீண்டு விளையாட வருவதே பெரிய விஷயம். அப்படியான காயங்களால் தான் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் நழுவுகின்றன. இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், எனக்கு எப்போதும் அடுத்து விளையாடும் ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் இருக்கும்.

முழு சீசன் ஆடினால் தான் இந்திய அணியில் விளையாட பரிசீலிப்பார்கள். எனவே, இம்முறை காயம் இல்லாமல் முழு சீசனையும் ஆட வேண்டும் என கவனம் செலுத்தி வருகிறேன். திறமையை மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி எதிர்பார்க்கிறது. எங்கேயோ இருந்த நான் எதுவுமே இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்றால் திறமை மட்டுமே காரணம். திறமைக்கு அப்பால் எதுவுமே தேவையில்லை.

உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு இளம் அணியை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது.

என்னுடைய பயோ பிக்கில் சிவ கார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. முதலில் போட்டிகளில் கவனம் செலுத்திவிட்டு பின்னர் படம் குறித்த வேலைகளின் ஈடுபடலாம் என நினைக்கிறேன். இந்தப்படம் இளைஞர்களுக்கு

இன்ஸ்பிரேஷனாகவும், என் வாழ்க்கையில் இருந்த சென்டிமென்ட், வலி உள்ளிட்ட எல்லா உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும்” என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *