நான் குறைவாகவே ரன்கள் எடுத்துள்ளேன்-மோர்கன்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. ஐதராபாத் அணியை 115 ரன்களுக்கு கட்டுப்படுத்திய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்குப் பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் நான் குறைவாகவே ரன்கள் எடுத்து இருக்கிறேன். நீண்ட காலமாக அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்காத நான் விரைவில் அணிக்கு நல்ல பங்களிப்பை அளிப்பேன் என்று நினைக்கிறேன். இதனை எனது அனுபவத்தின் மூலம் செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்று கூறினார். மேலும் இவர் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரின் ஆகியோர் எங்களுக்கு பெரிய தாக்கம் ஏற்படுத்தும் பவுலர்கள். அவர்கள் எங்கள் அணியில் இடம் பெற்று இருப்பது அதிர்ஷ்டம் ஆகும். குறிப்பாக சுனில் நரின் நீண்ட காலமாக அணியின் வெற்றிக்கு கணிசமாக பங்களித்து வருகிறார்.
இந்த ஆட்டத்தில் சுனில் நரின், வருண் மட்டுமின்றி மற்றவர்களும் நேர்த்தியாக செயல்பட்டனர். இதனால் எங்களால் எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட முடிந்தது. ஆடுகளத்தின் தன்மை எளிதில் கணிக்க முடியாத வகையில் இருந்தது. ஆடுகளத்தின் தன்மை எப்படி இருந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி உங்களை மாற்றிக் கொண்டு நன்றாக பந்து வீசுவதுடன் சிறப்பாக பீல்டிங் செய்ய வேண்டியது அவசியமானதாகும். அதனை நாங்கள் அருமையாக செய்தோம். பேட்டிங்கில் கடினமாக இருந்தாலும் சுப்மான் கில் சிறப்பாக செயல்பட்டு அரைசதம் அடித்தது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.