ஐ.பி.எல் தொடரில் டூ பிளஸி பங்கேற்க மாட்டார்!

ஐ.பி.எல் தொடரில் தற்போதுவரை முதல் பாதி ஆட்டங்கள் மட்டுமே முடிந்துள்ளது. எஞ்சிய 31 போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஐ.பி.எல் 14ஆவது சீசனில் மிரட்டலாக விளையாடி முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை குவித்து, இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இன்னும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டாலே போதும், சுலபமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். அணியில் பெரும்பாலானோர் நல்ல பார்மில் இருப்பதால், சி.எஸ்.கே. கோப்பை வெல்வதற்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பலர் கணித்துள்ளனர். இந்நிலையில், முதல் சில ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓபனர் ஃபாஃப் டூ பிளஸி பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.

இவர் சமீபத்தில் கரீபியன் லீக் தொடரில் விளையாடியபோது, இடுப்புக்கு கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அத்தொடரிலிருந்து விலகினார்.இருப்பினும், அவர் காயத்திலிருந்து குணமடையாததால் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் ஃபாஃப் டூ பிளஸிக்கு மாற்றாக ராபின் உத்தப்பாதான் களமிறங்குவார் என தகவல்கள் கசிந்துள்ளன. உத்தப்பா மொத்தம் 189 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 4,607 ரன்கள் குவித்துள்ளார்.
