டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி!

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வருகிர அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்பே அறிவித்துவிட்ட நிலையில், சில நாடுகள் அடுத்த வாரத்திற்குள் தங்கள் அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கான, வேலைகளையும் பிசிசிஐ தீவிரமாகச் செய்து வந்த நிலையில் நேற்று இரவு அணியை அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், ராகுல் சஹார், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார்,முகமது ஷமி ஆகியோர் கொண்ட குழுவாக இந்திய அணி உருவாகியுள்ளது. ஐபிஎல் தொடர்களிலும், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலும் அதிரடியாகப் பந்துவீசிய நடராஜனின் பெயர் டி20 உலகக் கோப்பை தொடரின் இடம்பெறவில்லை என்ற செய்தி ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.