முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஹக்கிம் மரணமடைந்தார்!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சையத் ஷாகித் ஹக்கீம் பக்கவாதம் ஏற்பட்டு கர்நாடக மாநிலம் குல்பர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 82. இவர் 1960 ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்திருந்தார். மத்திய நடுகல் வீரரான அவருக்கு அந்த ஒலிம்பிக்கில் ஒரு ஆட்டத்திலும் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அப்போது கால்பந்து அணியின் பயிற்சியாளராக அவரது தந்தை சையத் அப்துல் ரஹிம் இருந்தார். இதனால் அதன் பிறகு நடந்த 1962-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. அந்த ஆசிய விளையாட்டில் இந்திய கால்பந்து அணி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்திருந்தது.
உள்நாட்டில் நடக்கும் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் சர்வீசஸ் அணிக்காக விளையாடினார். சர்வதேச போட்டி நடுவராக ஆசியக் கிளப் கோப்பை போட்டியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்திய அணியின் பயிற்சியாளராகவும், மகேந்திரா யுனைடெட், சல்காவ்கர், பெங்கால் மும்பை எப்.சி. உள்ளிட்ட கிளப்புகளில் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்திய கால்பந்து அமைப்புடன் 50 ஆண்டுக்கும் மேலாக தொடர்பில் இருந்த அவருக்கு சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருதையும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது. அவரது மறைவுக்கு இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது.