தக்க நேரத்தில் உதவிய கமல்ஹாசன்… கோப்பையை சமர்பித்த தமிழக அணி!

துபாயில் நடைபெறும் போட்டிக்கு செல்ல முடியாமல் தவித்த தமிழக கிரிக்கெட் அணிக்கு உதவி செய்த கமல்ஹாசனால், தற்போது கோப்பையுடன் தமிழகம் திரும்பிய அணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் போன்றே மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பெறும் கிரிக்கெட் போட்டி திவ்யாங் பீரிமீயர் லீக் போட்டி இந்தாண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 90 தேசிய வீரர்களை கொண்டு அணிகள் பிரிக்கப்பட்டன.
சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பெயரில் தமிழக அணி விளையாடியது. டிபிஎல் போட்டியானது துபாயில் நடைபெறும் போட்டி என்பதால் தமிழக அணி வீரர்கள் போதிய நிதி வசதி இல்லாததால் தவித்து வந்தனர். இந்த நிலையில் கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் அவரிடம் தாங்கள் துபாய் செல்ல உதவும்படி கோரிக்கை விடுத்தனர். இதனைக் கேட்ட கமல் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்.
இதனையடுத்து துபாய் சென்று லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ஃபைட்டர்ஸ் அணியை சந்தித்தது. துபாய் ஷார்ஜா மைதானத்தில் கொல்கத்தா அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கோப்பையுடன் தமிழகம் திரும்பிய சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி நேரே துபாய் செல்ல காரணமாய் இருந்த கமல்ஹாசன் வீட்டுக்கு சென்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.