டூட்டி சந்த்தை முந்திய தமிழக வீராங்கனை தனலட்சுமி… தேசிய தடகளப் போட்டியில் சாதனை!

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கப் சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில், தேசிய சாதனை படைத்த வீரர் டூட்டி சந்த்தை முந்தி, முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ்.தனலட்சுமி.

திருச்சியைச் சேர்ந்த 22 வயதான தனலட்சுமி, ஒடிசாவின் டூட்டியை விட (11.58) குறைந்த விநாடிகளில் (11.39) ஓடி என்ஐஎஸ் (NIS) வளாகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, `அதிவேகப் பெண்மணி’ என்ற பெருமை பெற்றுள்ளார். மற்றொரு தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனையான அர்ச்சனா சுசீந்திரன் 11.76 விநாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது