முதல் டி20 போட்டி தோல்வியை தழுவிய இந்தியா, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 124 ரன்களில் சுருண்டது. இந்தியாவின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறிய நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவுள்ளதாக நேற்றைய தினம் விராட் கோலி அறிவித்த நிலையில் அவர் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி ஆடினர். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் பௌலிங்கில் 2-வது ஓவரிலேயே கேஎல் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதை தொடர்ந்து ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இந்தியா இழந்தது. இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடிய நிலையில் அவரும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். பாண்டியா 19 ரன்கள் மற்றும் ஐயர் 67 ரன்களை அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர். டி20 தொடரின் முதல் போட்டியில் 20 ஓவர்களையும் ஆடி 124 ரன்களை மட்டுமே அடித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அவர்கள் இருவரும் 49 மற்றும் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மலன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை முடித்தனர். 15.3 ஓவர்களில் வெற்றியை இங்கிலாந்து சாத்தியப்படுத்தியுள்ளது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி பெற்றுள்ளது.