உலகின் சிறந்த டிவெண்டி20 தொடர் ஐபிஎல் தான் – சாம் கர்ரன்

ஐபிஎல் தொடரில் விளையாடியது தனது ஆட்டத் திறனை மேம்படுத்த உதவிகரமாக இருந்தது என்றும், தற்போது இருக்கும் டி20 தொடர்களில் சிறந்த தொடர் ஐபிஎல் தான் என்றும் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் 22 வயதான சாம் கர்ரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். இதுவரை சிஎஸ்கே அணி ஆடியதில் மிக மோசமானத் தொடராக இது அமைந்தாலும் சாம் கர்ரனின் ஆட்டம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. பந்துவீச்சு, பேட்டிங் என்று சாம் கர்ரனின் அபாரத் திறமையை மகேந்திர சிங் தோனி வெகுவாகப் பாராட்டினார்.

தற்போது இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் முடிந்து டி20 மற்றும் ஒரு நாள் தொடர் நடக்கவிருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள சாம் கர்ரன் ஐபிஎல்லில் ஆடியது குறித்தும், வரப்போகும் ஐபிஎல் தொடர் குறித்தும் பேசியுள்ளார்.

“கடந்த வருடம் ஐபிஎல்லில் ஆடியதால் கண்டிப்பாக எனது ஆட்டம் மேம்பட்டுள்ளது. பல வழிகளில் பங்காற்றினேன். பல சவால்கள் எனக்குத் தரப்பட்டன. அதை நான் மிகவும் ரசித்தேன். அது எனக்கு சாதகமாக இருந்தது என நினைக்கிறேன். ஐபிஎல் அற்புதமான தொடர். அதில் விளையாடுவது வீரர்கள் அனைவருக்கும் பிடித்தமானது. அற்புதமான ரசிகர் கூட்டம், கிரிக்கெட் விளையாட இந்தியா சிறப்பான ஒரு இடம்.

உலகில் நடைபெறும் சிறந்த டி20 தொடர் ஐபிஎல் தான். எனவே அதில் விளையாடுவது சிறப்பான விஷயமாகும். குறிப்பாக அடுத்த டி20 உலகக் கோப்பை இந்தியாவில் இருக்கும் போது அது எங்களுக்கு நல்ல தயாரிப்பாக இருக்கும். இந்தச் சூழலில் சிறப்பாகச் செயல்பட எங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அடுத்த ஐபிஎல் தொடரையும் நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று சாம் கர்ரன் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *