இன்ஸ்டகிராமிலும் சதமடித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி!

இன்ஸ்டகிராம் தளத்தில் 100 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
பிரபல கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி, ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், அமெரிக்கப் பாடகி பியான்சே, பாடகியும் நடிகையுமான அரியனா கிராண்ட் ஆகியோரை இன்ஸ்டகிராம் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் 100 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்குத் தற்போது கிடைத்துள்ளது. முக்கிய சமூக வலைதளமான இன்ஸ்டகிராமில் அதிகம் பேர் பின்தொடரும் 4-வது விளையாட்டு வீரராகவும் கோலி உள்ளார்.
ரொனால்டோவை 265 மில்லியன் பேரும், மெஸ்ஸியை 186 மில்லியன் பேரும், நெய்மரை 147 மில்லியன் பேரும் இன்ஸ்டகிராம் தளத்தில் பின்தொடர்கிறார்கள்.
சமீபத்தில் இன்ஸ்டகிராமில் 75 மில்லியன் பேர் பின்தொடரும் முதல் ஆசிய வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றார். தற்போது 100 மில்லியன் என்கிற இலக்கை எட்டியுள்ளார்.