ஃபெடரரின் சாதனையைச் சமன் செய்தார் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்!

தரவரிசையில் அதிக வாரங்கள் முதல்நிலை வீரராக இருந்து ஃபெடரரின் சாதனையைச் சமன் செய்துள்ளார் பிரபல வீரர் ஜோகோவிச்.

கடந்த வாரம், தனது 9-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் அத்துடன் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றினார். கடந்த வருட பிப்ரவரி மாதம் நடாலைப் பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த ஜோகோவிச் இன்று வரை நம்பர் 1 வீரராகவே நீடித்து வருகிறார்.

ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் 310 வாரங்கள் முதல்நிலை வீரராக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்தச் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியின் மூலம் உலகின் முதல்நிலை வீரராக மீண்டும் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ள ஜோகோவிச், மார்ச் 8-ஆம் தேதி வரை அதே இடத்தில் நீடிப்பாா். இதன்மூலம் அடுத்த வாரம் ஃபெடரரின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள ஏடிபி தரவரிசையில் ஜோகோவிச் முதல் இடத்திலும், நடால் 2-ம் இடத்திலும் ஃபெடரர் 5-ம் இடத்திலும் உள்ளார்கள்.

கடந்த வருட இறுதியில் மற்றொரு சாதனையை ஜோகோவிச் நிகழ்த்தினார். ஒரு வருடத்தில் நெ.1 வீரராக ஆறு வருடங்கள் அவர் முடித்துள்ளார். 2011, 2012, 2014, 2015, 2018, 2020 ஆகிய வருடங்களின் இறுதியில் முதல் வீரராக அவர் திகழ்ந்துள்ளார். இதனால் ஆறு வருடங்களை முதல்நிலை வீரராக முடித்த சாம்பிராஸின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். 1993 முதல் 1998 என தொடர்ச்சியாக ஆறு வருடங்களை முதல்நிலை வீரராக முடித்துள்ளார் சாம்பிராஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *