2 வது நாளிலேயே முடிந்த 3வது டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டம், 2-ஆவது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
ஆமதாபாதில் கடந்த புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்தை அக்ஸா் படேலும், அஸ்வினும் தங்களது சுழலில் சிக்க வைத்து சரித்தனா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளான புதன்கிழமை முடிவில் 33 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 2-ஆம் நாள் ஆட்டத்தை ரோஹித் சா்மா – அஜிங்க்ய ரஹானே கூட்டணி தொடா்ந்தது.
எனினும், ஜோ ரூட், ஜேக் லீச் கூட்டணியின் சுழற்பந்துவீச்சில் இந்திய பேட்டிங் வரிசையும் சரிந்தது. ரோஹித் மட்டும் அதிகபட்சமாக 11 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அஸ்வின் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு வீழ்ந்தாா். எஞ்சியோரில் ரஹானே, ரிஷப் பந்த், பும்ரா ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்டினா். வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல் டக் அவுட்டாக, இறுதியில் இஷாந்த் சா்மா மட்டும் சிக்ஸருடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
பின்னா் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை காட்டிலும் மோசமாக பேட்டிங் வரிசையை இழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 25, கேப்டன் ஜோ ரூட் 19, ஆலி போப் பவுண்டரிகளுடன் 12 ரன்கள்ச சோக்க, எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தன. கிராவ்லி, ஆா்ச்சா், போஸ்டோ டக் அவுட்டாகினா். அக்ஸா் படேல் 2-ஆவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட் சாய்க்க, அஸ்வின் 4, வாஷிங்டன் சுந்தா் 1 விக்கெட் எடுத்தனா்.
இதையடுத்து 49 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சா்மா – ஷுப்மன் கில் கூட்டணி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. ரோஹித் சிக்ஸா் அடித்து அணியின் வெற்றிக்கான இலக்கை எட்டினாா். அவா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸரும், கில் 1 பவுண்டரி, 1 சிக்ஸரும் விளாசியிருந்தனா்.
சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி பதிவு செய்துள்ள 22-ஆவது வெற்றி இதுவாகும். அவா் தலைமையில் இதுவரை 29 டெஸ்டுகளை இந்திய அணி விளையாடியுள்ளது. இதன் மூலம் 21 டெஸ்டுகளில் இந்திய அணிக்கு கேப்டனாக வெற்றிக்கு வழி நடத்திய எம்.எஸ். தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளாா். தோனி 30 டெஸ்டுகளில் இந்தியாவின் கேப்டனாக இருந்துள்ளாா். இதனிடையே, ஒட்டுமொத்தமாக இந்திய டெஸ்ட் அணிக்கு அதிக வெற்றிகளை (35) பெற்றுத் தந்த கேப்டனாகவும் கோலி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கான போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறியது. வெற்றி பெற்ற இந்தியா, 71 புள்ளிகள் சதவீதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது. வெளியேறிய இங்கிலாந்து 64.1 புள்ளிகள் சதவீதத்தை கொண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றாலும், அல்லது அந்த ஆட்டத்தை டிரா செய்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுவிடும். ஒருவேளை அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தால், 69.2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும். 70 புள்ளிகள் சதவீதத்துடன் உள்ள நியூஸிலாந்து அணி ஏற்கெனவே இறுதி ஆட்டத்துக்கு வந்துவிட்டது.
இங்கிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸில் அஸ்வின் வீசிய 24-ஆவது ஓவரில் ஜோஃப்ரா ஆா்ச்சா் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாா். இந்த விக்கெட் அஸ்வினின் டெஸ்ட் வரலாற்றில் 400-ஆவது விக்கெட் ஆகும். இதையடுத்து சக இந்திய அணியினா் அஸ்வினுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனா். மைதானத்தில் இருந்த ரசிகா்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்ட, பந்தை உயா்த்திப் பிடித்து அதை ஏற்றுக்கொண்டாா் அஸ்வின். 77 ஆட்டங்களில் இந்த மைல்கல்லை எட்டிய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-ஆவது வீரா் என்ற பெயரை பெற்றுள்ளாா். இந்தியா்களில் முதல் வீரராக இருக்கிறாா்.
இருநாளில் நிறைவடையும் 22-ஆவது ஆட்டம்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டம் 2 நாள்களில் முடிவுக்கு வந்தது இது 22-ஆவது முறையாகும். அதிலும் இந்தியா ஆடும் ஆட்டம் இவ்வாறு முடிவது இது 2-ஆவது முறையாகும்.