முதல் டி20 போட்டியில், 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய நியூசிலாந்து!

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில், டெவன் கான்வே அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து  53 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி.  அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து தொடக்க வீரர்கள் கப்தில் 0, செய்பெர்ட்  1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நியூசி. அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் வந்த வேகத்தில் 2 பவுண்டரிகளை விளாசினாலும், 12ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனால் நியூசி. 4 ஓவரில்  19 ரன்னுக்கு 3விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், டெவன் கான்வே – கிளென் பிலிப்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 74 ரன் சேர்த்தது. பிலிப்ஸ் 30 ரன் எடுத்து (20 பந்து, 3 சிக்சர்) ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில்  மிட்செல் மார்ஷ் வசம் பிடிபட்டார்.

கான்வே 36 பந்தில் தனது 3வது டி20 அரை சதத்தை நிறைவு செய்தார். கான்வே – நீஷம் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 47 ரன் விளாசினர். நீஷம் 26 ரன் எடுத்து (15பந்து, 3பவுண்டரி) பெவிலியன்  திரும்பினார்.
நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. கான்வே 99 ரன் (59 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. தரப்பில் டேனியல் சாம்ஸ், ஜை ரிச்சர்ட்சன் தலா 2,  ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து  185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி, 17.3 ஓவரில் வெறும் 131 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. மிட்செல் மார்ஷ் 45 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 2  சிக்சர்), ஆஷ்டன் ஏகார் 23, ரிச்சர்ட்சன் 11, ஆடம் ஸம்பா ஆட்டமிழக்காமல் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். நியூசி தரப்பில் ஈஷ் சோதி 4 விக்கெட், சவுத்தீ, போல்ட் தலா 2 விக்கெட், சான்ட்னர், ஜேமிசன் தலா  ஒரு விக்கெட் எடுத்தனர். கான்வே ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி டுனடின் நகரில் பிப். 25ம் தேதி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *