களைப்பு தரும் க்ளிக் (க்ளிக் நாவல் குறித்து) – கணேசகுமாரன்

அயோத்தி திரைப்படத்தின் ஒரிஜினல் கதைக்குச் சொந்தக்காரரான மாதவராஜின் முதல் நாவல். முன்கோபமும் பிடிவாதமும் சுதந்திர மனப்பான்மையும் கொண்ட தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பூங்குழலி என்ற பெண்ணின் நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடையிலான கதை. தொடர்கதையாய் வெளிவந்தது இப்போது முழு நாவலாய். முதல் நாவலுக்கே உரித்த ஆச்சரியங்களும் தடுமாற்றங்களும் நிறைந்திருக்கும் நாவல்.

லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் ஐ. டியில் பணிபுரியும் மனிதர்களுக்கும் அதே பணத்தால் பிரச்சனை வரும்… அது தற்கொலை வரையிலும் கொண்டு செல்லும் என்பதைக் கொஞ்சம் அழுத்தமாக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பிரச்சனைகள் பெரும்பாலும் இன்றைய தலைமுறையின் சோசியல் மீடியா மூலம் உருவாகுவதைச் சொல்லியிருப்பதும் நன்றாகவே உள்ளது. வெளியிலிருந்து பார்க்கும் பகட்டுக்குப் பின்னால் இருக்கும் மன அழுத்தங்களை இன் செக்யூரிட்டி உணர்வை நாயகியிலிருந்து அவர் உடன் பணிபுரியும் நண்பர்களின் வாயிலாக நன்றாகவே கடத்தியுள்ளார். எந்தப் புள்ளியில் காதல் தொடங்கும் என்பதையும் நாவலின் ஓட்டத்திலேயே சொல்லியிருப்பது நன்று. பவித்ரா, ஆஷா என சின்னச் சின்ன கேரக்டர்கள் கொஞ்சம் சுவாரசியப்படுத்துகின்றன. ஆனாலும் நாவல் சற்றே சலிப்பூட்டுகிறது.

நாவல் தொடங்கிய ஐம்பது பக்கங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஐம்பது கதாபாத்திரங்களையும் நினைவில் வைத்திருந்து நாவலைக் கடப்பது களைப்பு தருகிறது. அப்படி வரும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பின்னால் சொல்லப்படும் பெரிய கதை அல்லது விளக்கம் நாவலாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்ற அயர்ச்சி ஏற்படுத்துகிறது. நாவலை ஏன் எழுதினேன் என்றொரு முன்னுரையும் நாவலுக்கு ஏன் இந்த தலைப்பு என ஒரு பின்னுரையும் வருகிறது. இரண்டுமே தேவையில்லாதது. தலைப்பை நியாயப்படுத்துவதற்காகவே இரண்டு மூன்று இடங்களில் வரும் க்ளிக் அநாவசியமாய் துருத்திக்கொண்டுதான் தெரிகிறது.

நாவலின் பல இடங்கள் தமிழ் சினிமாத்தனத்தை ஞாபகப்படுத்துகின்றன. அம்மா கோண்டுவாய் வீட்டின் செல்லப்பிள்ளையாய் இருக்கும் நாயகன் நரேன் மீது வாசகனுக்கு எந்தக் கோபமும் வராதது நாவலின் பெரிய பலவீனம். நாயகன் குறித்த எரிச்சல்கள் எல்லாம் நாயகியின் கற்பனையாகவே உள்ளன. அதுபோல் நாயகியின் கதாபாத்திரமும் குழப்பமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் என்றால் என்ன என்பதுபோல் சில விளக்கங்களும் சில கதாபாத்திர வடிவமைப்பும் வருகின்றன. எல்லாமே மேம்போக்கான ஒன்றாய் தென்படுகிறது. கல்யாணி என்ற பைத்தியக்காரப் பெண் கதாபாத்திரம் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆசிரியர். தன் தகப்பனுடன் உறவு வைத்திருந்ததால்தான் பைத்தியமாகி தன் அப்பாவின் கல்லறையைச் சுற்றி வருகிறாரோ என்று நினைப்பதெல்லாம் அபத்தம்.

இந்த நாவலுக்கு எதற்கு 2016 ம் வருடம்? நாவலில் நான்கு இடங்களில் கூட வராத லியோ கேரக்டர் குறித்த கே விளக்கம் ஏன்? நாவல் முடித்தபின் எதுவுமே மனதில் நிற்காதது ஆசிரியர் கூற்றுப்படி எதுவுமே க்ளிக் ஆகலை என்றுதான் முடிக்க வேண்டியிருக்கிறது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *