கனவில் பெய்யும் மழையின் சிரிப்பாய்… (தங்க உடலைத் தேடிச்சென்ற ஒரு பாம்பின் கதை தொகுப்பை முன்வைத்து) கணேசகுமாரன்- புத்தகப் பேச்சு

தீவிர சிற்றிதழ்களில் அவ்வப்போது தென்பட்டாலும் கவனிக்கத்தக்க இடத்தில் இருந்த முத்து மகரந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. முதல் கதையான தலைப்புக் கதையிலிருந்து புதியதோர் உலகத்துக்குள் செல்ல நம்மைத் தயார்படுத்துகிறார் ஆசிரியர். கவிதையிலிருந்து வந்த எழுத்து என்பதை பத்திக்கு பத்தி நிரூபிக்கும் கதை தங்க உடலைத் தேடிச்சென்ற பாம்பின் கதை.

நப்பின்னையின் குறிப்புகளாகத் தொடங்கும் மழைக்கால குறிப்புகள் கதை அத்தனை ஈரமான கதையாக மழை வாசம் வீசுகிறது. மழைக்கான காத்திருப்பு கவிதைக் குறிப்புகளாக விரிகின்றன. மழை வந்ததும் நிகழும் களேபரமும் அழகு. ‘மழ பேஞ்சா எங்க போயிரும்? ஊருக்குள்ளதான கெடக்கும்…’ என்ற பாமர மனதின் சமாதானம் போல பளிச்சென்று முடிகிறது கதை.
மனுக்காந்தி அத்தையின் சிரிப்பு கதையின் முடிவு பிரமாதமான குறும்படம் ஒன்றின் முடிவாக பகீர் என முடிகிறது. கதையின் முதல் வரியில் வரும் அத்தையின் சிரிப்பு குற்ற உணர்வில் மீள முடியாமல் இருக்கும் முருகனுடன் வாழ்நாள் முழுதும் பயணிக்கும் என்பது அறிந்ததுதான். அதுதான் அவனை பள்ளத்தில் வீழ வைக்கிறது. கதையின் இடையில் வரும் ‘வழி இருந்தால்தானே தொலைவதற்கு…’ கதைக்கான குறிப்பை உணர்த்துகிறது.

பூனைகளின் காதல் காலம் கதை ஒரு காதல் கதை என்று சொல்லிவிட முடியாத ஒரு காதல் கதை. பூனையின் இறுதி ஊர்வலத்தின்போது ஞாபகம் வரும் காதலை கதை ஆசிரியர் சொன்ன விதத்தில் எளிமையாக வெல்கிறார்.
ஒரு பட்டுப்பூச்சியும் நான்கு சிலந்திகளும் என்று வெகு ஜனரஞ்சகமான தலைப்புடன் சிறு சம்பவத்தை மட்டும் பதியும் கதையின் கடைசி வரி ஆசிரியரின் பெயரைப் பறைசாற்றுகிறது. போகன்வில்லா பூக்கள் கதை சுமாராய் வாசிக்கத் தெரிந்த ஓரளவு எழுதத் தெரிந்த அனைவரும் எழுதிவிடக் கூடிய கதைதான். ஆனால் கதையின் முடிவு முத்து மகரந்தனால் மட்டுமே யோசித்து அதை அலட்டிக்கொள்ளாமல் முன் வைக்க முடியும். கதையின் முடிவு தரும் அதிர்ச்சி கூட வலிந்து திணிக்கப்படாமல் அவ்வளவு இயல்பாய் நிகழ்கிறது. பிரமாதம்.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பிற கதைகளில் ஆப்பிள் மரம் மட்டும் சின்னதான அழகியலில் கவர்கிறது. யாத்திரை கதை நீளமான அலுப்பினைத் தருகிறது. கடவுள் என்ற தலைப்பில் வரும் இரண்டு கதைகளும் சுவாரசியமான பத்திகள். அவ்வளவே…
.