எட்டுக்குள் ஒளிந்திருக்கும் பூனை (நீரை. மகேந்திரனின் ஜீரோவில் தொடங்கும் எட்டு தொகுப்பு முன்வைத்து) – கணேசகுமாரன்

ஊடகவியலாளராக அறியப்படும் நீரை. மகேந்திரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. நவீனக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் சின்னச் சின்னச் சொல்லாடல்களில் இறுக்கமூட்டி படைப்புகளைப் பகிர்ந்தளிந்திருக்கிறார் ஆசிரியர். எட்டுக்குள் சிக்கிக்கொள்ளும் ஒரு தற்கொலையின் வடிவம் அதிர்ச்சியூட்டும் அதே சமயம் எட்டுக்குள் வரையப்படும் பூனை குழந்தை மனநிலைக்குத் தள்ளுகிறது.

பழகிய இடத்திலிருந்து விரட்டப்பட்ட பேறுகால பூனை, கயிற்றில் ஏறும் பிள்ளையின் கட்டை விரலுக்கும் பெரு விரலுக்கும் இடையிலான இடைவெளி என அங்கங்கே வியப்பூட்டும் படிம உத்திகள். சாதாரணமாகக் கடந்து செல்லும் கவிதைகளுக்கு நடுவில் காலியாகும் இருக்கை, வரிசையில் நிற்கும் ஆசிரியை, ஜீரோவில் தொடங்கும் எட்டு என சபாஷ் சொல்ல வைக்கும் கவிதைகளும், சிறு சொல் மாற்றத்தில் ஆச்சரியப்படுத்தக்கூடும் கவிதைகளும் தொகுப்பில் நிறைய காணப்படுகின்றன. அதுபோல் காத்திர கவிதைகள் சில எதார்த்த பாணிக்குச் சென்று சட்டென்று இலகுவாகி தாக்கம் குறைந்து தன் இயல்பைக் குறைக்கும் படைப்பும் உள்ளன.

நாய்க்கு பருப்பு என்றும் சைக்கிளுக்கு கவிதை எனவும் பெயர் வைக்கும் ஆசிரியரின் கலக மன உத்தியும் நன்றாக வந்திருக்கிறது. சமூகக் கோபம் வெளிப்படும் கவிதைகளை விட காதலுக்காக காத்திருக்கும் கவிதைகளில் கவிஞர் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். செல்லத்தம்பியை அறிமுகம் செய்கிறேன் கவிதை அழகான காதல் குறும்படம். அறுக்கப்பட்ட சட்டை பட்டன்கள் போன்ற கவிதைகள் அதிகமிருந்திருந்தால் தொகுப்பு இன்னும் அடர்த்தியாய் இருந்திருக்கும். கவிதைகளில் உள்ள சாட்டை இறுக்கம் கவிதைத் தேர்வுகளிலும் இருந்திருக்கலாம்.

தொகுப்பிலிருந்து….

அம்மாவின் வயது நாற்பது

அம்மாவுக்கு நாற்பதிலேயே
தலைமுடி நரைக்கத் தொடங்கியது.
முன்போல கண்ணாடி முன் அதிக நேரம் நிற்பதில்லை
சடுதியில் கிளம்பிவிடுவாள்
கடைக்குச் செல்லவோ
வெளியூர் பயணத்துக்கோ
அணைத்துத் தூங்கும்போது
வீசும் குடிகூரா வாசத்துக்காகவே
அம்மாவை இன்னொரு முறை இறுக்கிக் கொள்வேன்
அதன் பின்னர்
அவள் முந்தானையில்
கசங்கிய அடுக்களை வாசனை ஒட்டிக்கொண்டது
அப்பாவுக்குத்தான் ஆவதில்லை
கொஞ்சம் டை அடிச்சுக்கோ சகுந்தலா என்பார்
அவரின் வெள்ளுடை தரிப்புக்கு ஈடாக
கல்யாண மண்டபத்தில் யாரையோ பார்த்தவர்
போகவர ஆகிவிட்டது எனப் பேச்சானது
அப்படியென்ன அவகிட்ட கண்டுதாரு புலம்பிய அம்மாவுக்கு
யாராரோ ஆறுதல் சொன்னார்கள்
எனக்கென்ன குறைச்சல் என
ஒருதரம் கண்ணாடி
பார்த்து நின்ற அம்மாவுக்கு
அப்போது நான் பிறந்திருக்கவில்லை.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *