HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 75

காவல் தலைவன்

ஒவ்வொரு நாடும் அதன் வளர்ச்சியில் முக்கிய உயரம் காணத் துடிப்பது வழக்கம். அந்த வளர்ச்சிக்கு யாரோ ஒருவரின் தனிப்பட்ட உழைப்பு மட்டும் காரணமாக இருக்க முடியாது. ஆனால் அதில் ஒரு சிலரின் தனிப்பட்ட பங்களிப்பு தவிர்க்க இயலா ஒன்றாக அமையும். அல்லது தீர்க்கமான குறிக்கோள் கொண்ட ஒருவரின் கனவினை நனவாக்க சிலரது பங்களிப்பு அதற்கு உறுதுணையாக இருந்து அந்த எண்ணம் ஈடேற்றம் அடைய முக்கியக் காரணியாக அமையும். எண்ணற்ற உதாரணங்கள் இதற்கு வலு சேர்க்க நம் கண் முன்னே வந்துபோகும். அவற்றை நாம் அசைபோட்டுப் பார்ப்போம். அதேபோல ஒவ்வொரு குடும்பத்திலும் அச்சாணியாகவும், ஆணி வேராகவும் இருந்து அந்தக் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்த பலரை நாம் பார்த்திருப்போம், நாம் கூட அதில் ஒருவராக இருக்கலாம். யாரோ ஒருவரின் எண்ணற்றத் தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும் பலரது வாழ்வு வளம் பெற்று செழித்து நிற்பதை நாம் பார்க்கும்போது நமக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவது இயல்புதானே.

மொத்தத்தில் இவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு விதத்திலோ அல்லது பல விதத்திலோ காவல் தலைவனாக நம் கண் முன் வந்து நிற்கிறார்கள். நம் தமிழரின் வழிபாட்டு முறைகள் கூட வீரம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை அடிப்டையாகக் கொண்டது. யாரெல்லாம் தன் இனத்திற்காக, மக்களின் நலனுக்காக, சமூக மற்றும் பிற உயிர்களின் உயர்வுக்காக தன்னை ஈடுபடுத்தினார்களோ அவர்களை எல்லாம் காவல் தலைவனாக மதிக்கும் மற்றும் போற்றும் செயல் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. வீரம் சரி, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் இரண்டும் ஒன்றுதானே எனும் குழப்பம் வரலாம். இரண்டும் வெவ்வேறு கருத்தினைக் கொண்டதாகும். அர்ப்பணிப்பு என்பது ஒரு செயலுக்காக தன்னை முழுதும் அர்ப்பணித்து செயல்படுவது. தியாகம் என்பது உயர்ந்த நோக்கத்திற்காக மேலும் தான் நேசிக்கும் ஒருவருக்காக எதையாவது விட்டுக் கொடுத்து அதை அவர்கள் அடைய உறுதுணையாக இருப்பது.

முகமறியா யாரோ ஒருவரின் தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும் தான் நமது வாழ்வை நாம் சிறப்பாகக் கொண்டுசெல்ல முடிகிறது என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். அப்படி இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்க்கையில் எல்லாமே ஒரு தொடர் சங்கிலிதான், ஒன்று அறுபடும்போது மற்றொன்று அதன் தொடர்பை இழக்கிறது. ஒன்றோடொன்று கைகோர்த்து பயணிக்கும்போது ஒரு தன்னலமற்ற உணர்வு ஏற்படும். தனது சொந்த நலன்களில் கவனம் செலுத்தாது, மற்றவர்களுக்காக, பொது நலனுக்காக தனது வாழ்க்கையைத் தியாகம் செய்பவர்கள் வாசிக்கவேண்டிய இசைக்கருவி அல்ல மாறாக நாம் சுவாசிக்க வேண்டிய காற்று.

இப்படி எத்தனையோ பேர் காவல் அரணாக, காவல் தலைவனாக இருப்பது எத்தனை பெருமை. எனக்கான நல்ல நண்பன் என்பதை விட எத்தனை பேருக்கு நான் நல்ல நண்பன் என்பதை கேட்டு விடைகாணும் போது அதன் ரசனையே தனி. அது நம்மை இன்னும் உரமூட்டி நம் வாழ்வை பொருளுள்ளதாக மாற்றும் ஆற்றல் கொண்டது.

இதெல்லாம் பொதுவான கருத்து, பணிபுரியும் இடத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். எத்தனையோ துறைகள் இருந்தாலும் மனித வளத்துறை சற்று உன்னதம் உள்ளதாக பார்க்கப்படும். அதற்காக பிற துறைகளைப் பற்றி தவறாக சொல்கிறேன் என்பதல்ல. மனித உணர்வுகளோடு அதிகம் பயணிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு என்பதால் இதைச் சொல்கிறேன். மனம் எனும் மாயக் கிணற்றில் உறங்கும் காதல் மற்றும் பேரன்பை மனிதர்கள் உணர ஆரம்பிக்கும் போது அங்கு தியாகமும் அர்ப்பணிப்பும் ஊற்றெடுக்கும். இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் மனித உயிர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. கால காலத்திற்கும் மறக்க முடியாத மனித மரபணுக்களில் ஆழமாய் பொதிந்து கிடக்கும் பொக்கிசம். இதை வெளியே எடுத்து பயன்படுத்தும் மனிதர்களும் உண்டு, பொத்தி வைத்து பாதுகாப்பவர்களும் உண்டு. இதில் நாம் யார்?

நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலர் இடம்மாறி வேறு நிறுவனங்களுக்கு சென்ற பிறகும், தொடர்ந்து தொடர்பில் இருக்கும் துறை என்றால் அது மனித வளத்துறை தான். அந்தத் துறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை பார்க்கும் பலர் உண்டு. இந்தத் துறையை மிகவும் புனிதம் வாய்ந்த துறை போல நீங்கள் காண்பிக்க முயற்சிக்க வேண்டாம் என்று சிலர் என்னிடம் கூறியதுண்டு. எதையும் புனிதப்படுத்தும் நோக்கில் இதை நான் எழுதவில்லை, மாறாக புனிதம் நிறைய இருக்க வேண்டிய துறை என்பதால் எழுதுகிறேன். பல்வேறு நிறுவனங்களில் ஏதோ ஒரு பிரச்சனை என்றால் தாக்கப்படுவது மனித வளத்துறை தான். மற்ற துறையில் உள்ளவர்கள் எளிதாக இவர்களை கைகாட்டி விட்டு நகர்ந்து விடும் சூழல் உண்டு. ஆனாலும் அதையெல்லாம் கடந்து எல்லாத்துறைகளிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யும் நபர்களால் தான் அந்த நிறுவனம் நிலைத்து நிற்கும். அவர்கள் விலை மதிப்பற்றவர்கள் என்பதைத் தாண்டி, விலை போகாதவர்கள் அவர்களை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க மாட்டார்கள். தன் நிலை அறிந்து, பிறர் நிலையும் அறிந்து செயல்படும் நபர் காவல் தலைவனாக மட்டும் அல்ல காக்கும் தலைவனாகவும், மக்கள் மனதில் காக்கப்படும் தலைவனாகவும் நிலைத்து நிற்பான்.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், ஒப்பிடமுடியாதவர்கள். நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான். – ஓஷோ.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *