HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 70

கோபம் எனும் கொடுங்குற்றம்

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்வு. இது மனிதனுக்கு மட்டுமா என்றால், இல்லை. அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இயல்பாக இருக்க வேண்டிய மனிதன், இயல்புக்கு மீறி மாறும் நிலை, சூழலாலும், அந்த சூழலை உள்வாங்கும் விதத்தாலும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. ஒரு சில உணர்ச்சிகள் நம்மை விட்டு அகலாது எப்போதும் நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கும் அவற்றுள், பொறாமை, பகை, வெறுப்பு காதல், காமம் மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகள் அடங்கவே அடங்காது. ஏதோ ஒரு வகையில், ஏதோ விதத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். அது அணைக்கப்பட்ட தீக்கங்கு, எப்போது வேண்டுமானாலும் கொழுந்து விட்டு எரியும் தன்மை கொண்டது. இவற்றுள் கோபம் மட்டுமே அதிகமாக விவாதிக்கப்படுகிறது. ஏனென்றால் அதன் தாக்கம் அதிகம், விளைவுகளும் அதிகம்.

கோபம் பல வகைகளில் மற்றும் விதங்களில் அறியப்படுகிறது, சினம், சீற்றம், கோபம், வெகுளல், கனலுதல், கடுகடுத்தல், அறச்சீற்றம், ஆத்திரம், ஆவேசம், மூர்க்கம், முனிவு, ரௌத்திரம், குரோதம் போன்றவையாகும் கோபத்திற்கு இவ்வளவு வகைகள் இருக்கும்போது, நாம் வித விதமாக கோபப்படுவதில் என்ன தவறு எனும் முடிவை எடுத்துவிட வேண்டாம். கோபமே கூடாது என்று யாரும் சொல்வதில்லை, தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் காரணங்களுக்காக கோபம் கொள்வதில் தவறில்லை என நம் திருவள்ளுவர் கூறுகிறார். அதேநேரத்தில் அதை சரிவர கையாளும் பக்குவம் வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

மொத்தத்தில் கோபம் என்பது ஏற்கத் தக்கதாக இருக்கவேண்டும் என்பதே அடிப்படை நியதி. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் இருக்கவேண்டிய அதே நேரத்தில், நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றிற்காக கோபப்படுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்பதை உணர வேண்டும். ஞானியிடம் ஒருவர், நான் மகிழ்வாக இருக்க ஒரு வழி சொல்லுங்களேன் என்று கேட்ட போது, ‘நீங்கள் கோபப்படாதீர்கள்’ என்று கூறினாராம். மீண்டும் மீண்டும் அந்த நபர் அந்த ஞானியிடம் வந்து இந்தக் கேள்வியையே கேட்ட போது, அவர் கோபப்படாமல், நீங்கள் கோபப்படாதீர்கள் என்பதை மட்டுமே பதிலாகக் தந்தாராம், இதைக் கேட்டு அந்த மனிதருக்கு சற்று கோபம் தலைக்கேறி விட்டது. இப்படித்தான், தன் நிறை வேறாத மற்றும் எதிர்பார்க்கும் பதிலோ செயலோ நடக்கவில்லையெனில் பலருக்கு இதுபோல கோபம் வந்துவிடும். எல்லாவற்றிற்கும் ஓர் அளவு உண்டு, அந்த அளவை, அந்த எல்லையை நாம் தாண்டும் போது கணக்கிலடங்கா கோபம் பீறிட்டு வந்துவிடும்.

இப்படி இந்தக் கோபமானது சிறு சிறு எரிச்சலில் குறைந்த கோபமாக கருவாகி, ஆத்திரம் எனும் பெருஞ் சீற்றத்தில் உருவாகி நிற்கும், இந்த நிலை அதி தீவிர உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பல்வேறு பின் விளைவுகளை வாரி வழங்கிவிடும். கோபத்தோடு எழுந்தவன் நட்டத்தோடு உட்காருவான்’ ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ எனும் பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அநீதிகளைக் கண்டு பொங்கி எழுதல் என்பது அறச்சீற்றம் அது தேவையான ஒன்றுதான் அது செயலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். தனக்கு நிகரில்லா ஒருவர் மீது காட்டும் கோபம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலா ஒன்று என நம் பண்பாடு கூறுகிறது.

சரி இதை எப்படித்தான் கட்டுப்படுத்துவது எனும் கேள்வி எழும். எப்படிக் கட்டுப்படுத்துவது என எண்ணாமல் எப்படிக் கையாள்வது என எண்ணுவதே சாலச் சிறந்தது. நிறுவனங்களில் வேலை பார்ப்போருக்கு கோபம் அதிகமாக வருமே? வரும், ஆனால் அதிகாரம் அங்கு அணைபோட்டு விடும். கட்டுக்கடங்கா மற்றும் அடக்க முடியா கோபம் ஒருநாள் வெடித்தே தீரும்,

இவற்றை எல்லாம் சரிசெய்யும் பொருட்டு சிலபல பயிற்சிகள் உண்டு, அது ஒருபக்கம் போய்க்கொண்டு இருந்தாலும், மனித வளத்துறை சார்பாக முன்னெடுக்கப்படும் இன்னொரு சிறப்பான செயல் Role Play என்று அழைக்கப்படும், இன்னொருவர் சூழலில், வேலையில் நான் இருக்கும் போது எப்படி இருக்கும் என்பதை கண்கூடாக உணர மற்றும் அறிய இந்த வழிமுறை கையாளப்படும். மேலும் Job Rotation என்று சொல்லப்படும் வேலையை சுழற்சி முறையில் அந்தத் துறையில் இருப்பவருக்கு கொடுப்பதன் மூலம், அதில் உள்ள சிக்கல்களையும், ஏற்ற இறக்கங்களை அறிவதன் மூலம், இவ்வளவு நாளாக அந்த வேலையை செய்தவர் மீது இருந்த வெறுப்பு நீங்க ஒரு காரணியாகக் கூட அமையலாம்.

குடும்பத்தில் கூட, வேலையை நாம் பகிர்ந்துகொண்டு, ஒருநாள் ஒருவர், இன்னொரு நாள் இன்னொருவர் என மாற்றிச் செய்யும் போது, அங்கே கோப உணர்வுகள் மறைந்து புரிதல் உணர்வு மேலிட ஆரம்பிக்கும். கோபம் ஓர் உணர்வு. அதை அனைவருமே கடந்து வந்திருப்போம். பல நேரங்களில் கோபம் நம்மை மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்கிறது. கோபம் நம் கட்டுப்பாட்டை மீறி வரும் போது அது நம் வாழ்க்கையிலும், உறவுகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். கோபத்தை கையாள்வதின் மூலம் நாம் சிறப்புற முடியும், அதற்கென்று எளிய பயிற்சி முறைகள் உண்டு, அதிலும் சரிசெய்ய முடியவில்லை என்றால் மேம்பட்ட மருத்துவ முறைகளும் உண்டு.  கோபம் ஓர் உணர்வு. அனைவருக்குமே அது பொருந்தும், பல நேரங்களில் கோபம் நம்மை மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும், ஆதலால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நமக்கு நன்மை பயக்கும். அன்பு எனும் ஒரு செயல்தான் அதற்கு மாமருந்தாக அமையும். அந்த இடத்தில் நான் இருந்தால் என எண்ணிப்பார்க்கும் எண்ணமும் சிறந்த மருந்தாக அமையும்.

வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும். – அரிஸ்டாட்டில்

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Enoch Thomas P says:

    Nice one