HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 69

கண்ணசைவில் ஒரு சேதி

நம் உடல் என்பது அதிசயம் மிகுந்த ஓர் அமைப்பு, அதில் உள்ள ஐம்புலன்களின் செயல்கள் அற்புதமானவை. அவற்றினை அறிய அறிய நம் வியப்புக்கு அளவில்லாமல் நீண்டுகொண்டே போகும். அதிலும் குறிப்பாக கண்கள் பற்றி பேச ஆரம்பித்தால் நாம் பேசிக்கொண்டே போகலாம். நம் ஐம்புலன்களில் கண்கள் விலை மதிப்பற்றவை. பார்வை பறிபோனால் எல்லாம் பறிபோகும். என் கண்ணே, மணியே, உன்னை என் கண்ணின் மணி போல பார்ப்பேன், கண்ணுக்குள்ளே உன்னை வைத்துக் காப்பேன், ஆயிரம் கண்ணுடை அம்மன், இந்த அழகை ரசிக்க கோடிக் கண்கள் வேண்டும், எனப் பல்வேறு சொற்பதத்தில் கண்ணிற்கு ஏன் இந்த அதி முக்கியத்துவம்? கண் என்பது வெறும் பார்வைக்காக மட்டும் அல்ல, அதையும் தாண்டி பல்வேறு உணர்வுகளையும், புரிதல்களையும் நமக்குள் கடத்தி எண்ணிலடங்கா மாற்றங்களை நமக்கு ஏற்படுத்தும். ஒர் அழகிய காட்சியைப் பார்க்கும் போது உடனே அதை படமெடுக்க ஆர்வம் கொண்டு எடுத்து விடுகிறோம், ஆண்டாண்டு காலம் நம் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆனால் அந்த படமெடுத்தக் கருவியை விட பன்மடங்கு Pixel கொண்ட கண்ணின் மூலம் உள்வாங்கிய அப்படம் என்றைக்கும் நம் மனதில் ரீங்காரமிடும், நிரந்தரமாக தங்கியும் விடும்.

ஐம்புலன்களில் கண்ணிற்கு ஏன் முதலுரிமை? மற்ற புலன்கள் எல்லாம் அதை தொட்டாலோ அல்லது மிக மிக அருகில் அதற்கான உள்வாங்களை உணர்ந்தால் மட்டுமே அது முழு செயல்பாட்டில் இருக்கும், கண் அப்படி அல்ல, சற்று தொலைவில் உள்ளதைக் கூட நமக்குள் கடத்தி நம்மை விழிப்புணர்வும், அகமகிழ்வும் அடைய வைக்கும். இந்தப் புலன்கள் எல்லாம் வெளியில் நடக்கும் பலவற்றை நமக்கு உள்ளே கடத்தும் கருவிகள். அதில் எது நமக்கு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை நம் அறிவும், ஆழ்மனமும் சேர்ந்து முடிவெடுக்கும், நம் ஆழ்மனத்தையும், அறிவையும் ஒழுங்குபடுத்துவது நம் எண்ணங்கள்தான். ஆதலால் வெளியில் நடப்பதை நமக்கு உடனே உள்ளே கடத்தி நம்மை விழிப்புணர்வு அடைய வைப்பதில் முழு வேகமாக கண்கள் செயல்படுவதால் அது எப்போதும் போற்றுதலுக்கும் பல்வேறு உவமைகளுக்கும் பயன்படுகிறது. ஒரு மாலைப் பொழுதில், மனதில் உள்ள சஞ்சலத்தையும், வேறு சிந்தனையையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் இனிமையான பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப் பாருங்கள். உங்கள் உடம்பெல்லாம் ஒரு புல்லரிப்பு ஏற்படும், அந்தப் பாடலையே சற்று கண் திறந்து தேவையான காட்சியோடு பொருத்திப் பார்த்து அந்தப் பாடலை ரசிக்க ஆரம்பிக்கும்போது உங்கள் உணர்வு நரம்பெல்லாம் ஒருசேரத் துடிக்கும். இதுதான் கண்ணின் மாயவித்தை.

கண்ணானது பேசாமல் பேசும் ஒருவித வித்தையை நமக்குக் கற்றுத்தரும். நேருக்கு நேராக கண்களைப் பார்த்து பேசுவதில் இருந்து நீங்களே பல தகவல்களை புரிந்து கொள்ளலாம். உண்மை பேசும் உள்ளம் மட்டுமே கண்களைப் பார்த்துப் பேசும், உண்மை இல்லாத பட்சத்தில் நம் கண்ணே நம்மை காட்டிக் கொ(கெ)டுத்துவிடும். மேலும் ஒருவர் உங்கள் கண்களைப் பார்த்துப் பேசும் போது உங்களுடன் பேசுவதில் அவருக்கு விருப்பம் உள்ளதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் உங்களுடன் பேசுவதில் இயல்பான சூழலில் உள்ளாரா இல்லை தவிர்க்க முற்படுகிறாரா? என்பதையும் கண்டு கொள்ள முடியும். பேசும் பொழுது கண்ணோடு சேர்ந்து இன்னொன்றும் சேர்ந்து அந்தக் கண்ணின் மொழிகளை நமக்குக் காட்டுவது நம் புன்னகை தான். நமக்குள் இருக்கும் பாசத்தை, வேசத்தை, பண்பை, அன்பை, காதலை, பொறாமையை, ஆற்றாமையை இப்படி எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது நம் கண்தான். கண்ணாலே காதல் கவிதை தந்தாயே எனக்காக எனும் பாடல் தொடங்கி பல பாடல்கள் கண்களை மையம் வைத்தே உள்ளது. கண்களால் கைது செய் எனும் தலைப்பில் இயக்குனர் இமையம் பாரதிராஜாவும் ஒரு படத்தினை தந்துள்ளார். இவற்றையெல்லாம் ஒருங்கமைத்துப் பார்க்கும்போது நம் கண்ணின் மேன்மை புரியும்.

கண்ணசைவில் பலவற்றை சாதிக்கும் பலம் கொண்ட பலர் உண்டு. திரு திருவென முழித்து பல இடங்களில் மாட்டிக்கொண்டவர்களும் உண்டு. இதை நாம் உடல் மொழி (Body language) என்கிறோம். நம்மை சிறந்த ஆளுமைமிக்க மனிதராக மாற்ற இந்த உடல்மொழி மிக மிக அவசியம். இதைப்பற்றி நாம் இதற்கு முந்தைய தொடரில் பேசியிருந்தாலும், கண் பற்றி தனித்த ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்பது என் தீவிர விருப்பம். தகவல் பரிமாற்றத்தில் (Communication) வார்த்தைகளுக்கு அடுத்தபடியாக சில நேரங்களில் ஈடாகக்கூட, உடல் நடத்தைகள் (Body Language) முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதில் முக வெளிப்பாடு, உடல் தோரணை, சைகைகள், கண் அசைவு, தொடுதல், போன்ற உடல் இயக்கங்கள் மூலம் தகவல் வெளிப்படுத்துவதை குறிக்கும். ஏன் இந்த உடல் மொழி மிகவும் ஒரு பேசுபொருளாக இப்போது நிறைய இடங்களில் பேசப்படுகிறது, அதுவும் குறிப்பாக மனித வளத்துறையில் மிகச் சிறப்பாக கையாளப்படுகிறது? இதைப்பற்றிய ஆய்வு பல தளங்களில்  உடல் மொழியியல் எனும் பெயரில் நடத்தப்படுகிறது, உடல் மொழி என்பது தகவல் தொடர்பின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும், பெரும்பாலானவை நம்மை அறியாமல் அனிச்சைச் செயலாகவே நடக்கும். அதன்மூலம் வேலைக்கு வரும் பணியாளர்களின் மனநிலை என்ன? அவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறாக இருக்கும் என்பதை அறிய முடியும். இந்த சைகை மொழி மற்றும் உடல் மொழியியல் ஆனது காவல் துறையில் அதுவும் குறிப்பாக துப்பறியும் துறையில் அதிகம் பயன்படும். இதை சற்று உன்னிப்பாக உள்வாங்கினால் நம் அன்றாட வாழ்வில் இதை மிகச் சிறப்பாகக் கையாண்டு மிகப் பெரிய ஆளுமையாக நாம் வளம் பெறலாம்.

கண்ணின் கண்மணியை நம்பத்தக்க ஓர் உடல்மொழியாகக் கருதுவதின் காரணம் அதன் செயல் நம் மனநிலையை ஒத்திருக்கும். அதன் மூலம் ஒருவரது எண்ண ஓட்டத்தோடு நாம் உடன்படுகிறோமா இல்லையா என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். எல்லா நிலையிலும், எல்லாத் துறையிலும் இந்தக் கண்ணசைவு மொழிகள் இல்லாத இடமில்லை எனலாம். பார்வைமொழி என்பது நம் பண்பாட்டுக் கூறு சார்ந்தது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். ஒவ்வொரு கண்ணும் அவர்கள் சார்ந்திருக்கும் நிலப்பரப்பினை காட்டக்கூடியது. உ.ம் சீனா மக்களின் கண்கள் சிறிதாகவும், ஆப்ரிக்க நட்டு மக்களின் கண்கள் பெரிதாகவும், நம் நாட்டு மக்களின் கண்கள் பெரிதும் இல்லாமல், சிறிதும் இல்லாமல் பொதுவான ஒரு அமைப்பை பெற்றிருக்கும், இதன் மூலம், நாம் பல்வேறு படிப்பினைகளை பெற முடியும். நம் உடலில் ஏற்படும் குறைபாடுகளை முதலில் நமக்கு உணர்த்துவது நம் கண்கள்தான். உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், அதீத ரத்தப் போக்கு, மஞ்சள் காமாலை, கல்லீரல் குறைபாடு போன்றவற்றை சிற்சில மாற்றங்கள் மூலம் நம்மை எச்சரிப்பதும் நம் கண்கள்தான். இப்படிப் பலவிதத்தில் உதவும் நம் கண் மீது ஒரு கண் வைப்பது அவசியம்.

பல்வேறு நிறுவனங்களில் நடக்கும் மிக முக்கியான கூட்டங்களில் கண்ணசைவு மொழிகள் அதிகம் இடம்பெறும். பேசா மொழிகளில் பேசி பல முடிவுகள் எடுக்கப்படும். அதுவும் குறிப்பாக தொழிலாளர் கூட்டமைப்போடு நடைபெறும் கூட்டத்தில் இந்த கண்ணசைவு உடல்மொழி பல குறிப்புகளை உணர்த்தும். இதை அறிந்துகொண்டு நடப்பது ஆளுமைமிக்கப் பண்பின் ஓர் அடையாளம். கண்களில் கண்ணீர் மட்டுமே வழிந்தோடுவதில்லை, காதலும், அன்பும், ஏக்கமும், தவிப்பும், எதிர்நோக்கும், இன்னும் எண்ணற்ற உணர்வுகளின் இருப்பிடமாக இருப்பது நம் கண்களின் சிறப்பு. நாமும் சிறப்புற, நம் கண்ணின் மொழியினை உணர்ந்து, பிறர் கண்ணின் மொழிகளை அறிந்து செயல்படுவோம்.

உடல்மொழி பலநேரங்களில் நம் உள்ள மொழியாகவே இருக்கும், வார்த்தைகள் பேசமுடியாததை அசைவுகள் பேசும்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *