HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 67

இடமாறு தோற்றப்பிழை

பல திறமைகளை கைவசம் வைத்துள்ள பலரால் தான் எட்ட நினைக்கும் உயரத்தை எட்ட முடியாமல் போவதற்கு சில காரணங்கள் இருக்கலாம், அந்தக் காரணங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று எனில் கவலை கொள்ள அவசியமில்லை. தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் தன்னால் அவற்றைத் தாண்ட முடியாமல் சில காரணங்கள் தடுக்கும் அவற்றை முதலில் அடையாளம் கண்டு களைய வேண்டியது நம் முதல் பொறுப்பு. சரி, தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் சரிசெய்து வெற்றிகாண முடியாமல் கோட்டை விடும் காரணங்களில் ஒன்று பணியிட மாறுதல்தான் (Job Relocation). பலருக்கு இது சிக்கலாக இருந்து மென்மேலும் மேலே செல்வதற்கு ஒரு தடையாக அமைந்து விடுகிறது. அதில் உள்ள சில சிக்கல்களை சிக்கெடுக்க முனைவோம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாராட்டி மகிழும் அதே நேரத்தில் ஊர்விட்டு ஊர் மாறி வேலை பார்ப்பதென்பது பலருக்கு கசப்பாகவே உள்ளது. இன்று பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்து வாழ்ந்து வரும் தமிழர் கூட்டத்தில் பெரும்பாலோர் விருப்போடு சென்றவர்கள் அல்ல மாறாக, வாழ வழி தெரியாமல் அதே நேரத்தில் அங்கு போனால் மற்றுமொரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் எனும் கனவோடு பயணித்தவர்கள்தான் அதிகம். அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தன் உயிரையாவது காத்துக்கொள்வோம் எனும் பயத்தோடு இடம்பெயர்ந்தவர்கள், இன்றோ இவர்களில் பெரும்பாலோர் வியக்கத்தக்க வகையில் தங்களது வாழ்வை சிறப்பாக உருவாக்கிக்கொண்டனர். என்ன நடந்தாலும் வாழ்க்கையை நாம் வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் எனும் தீவிர எண்ணம்தான் முதற் காரணம்.

புதிதாக ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்லும்போதே அங்குள்ள நடைமுறை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் மனதிற்குள் ஒருசில மாற்றத்தையும் இன்னும் ஒருபடி மேலேபோய் மன அழுத்தத்தைக் கூட ஏற்படுத்தலாம். அதுவே வேலைக்கான இடமாற்றம் எனும்போது வேறுசில அச்சத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, அதற்கு முதலில் அங்குள்ள வாழ்க்கை முறையை அறிந்துகொள்வது நல்லது. அங்குள்ள சூழலுக்கு உங்களை தகவமைத்துக் கொள்வதில் இருக்கும் சிக்கல் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மேலும் ஒரு வேலைக்காக இடம்பெயர்வதில் உள்ள மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து நமது தொடர்பு தடைபடுவதுதான். அன்புக்குரியவர்களின் நேரடி ஆதரவை விட்டுச் செல்வது கடினம்தான், அதை நேர்த்தியான வகையில் கையாளத் தெரிந்துவிட்டால் நம்மை நாமே ஒரு தகுதி நிலைக்கு தயார்படுத்தி விட்டோம் எனும் பெருமையை அடையலாம். நம் வாழ்க்கை என்பது பொருள் நிறைந்தது, பொருளால் நிறைந்தது மட்டுமே என நினைக்கும் போதுதான் அங்கு சிக்கல் தலைதூக்க ஆரம்பிக்கும். வேலை மட்டுமே பெரிதென நினைப்பவர்களுக்கு இது ஒன்றும் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதைத்தாண்டி ஒரு சமூகமாக வாழும்போது நமக்கென்று ஒரு பிடிமானம் இருக்கும், ஒரு கூட்டுணர்வு ஏற்பட்டு வாழும்போது சற்று மன ஆறுதலைத் தரும். அதற்காக நாம் எங்கேயும் செல்லாமல் வீட்டிற்கு அருகிலேயே வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என நினைக்க வேண்டாம். நட்பினை நாம் எங்கு சென்றாலும் ஏற்படுத்திக்கொள்ளலாம், குடும்பத்தினரை மட்டும் சற்று புரியவைக்க வேண்டும் அவ்வளவுதான்.

வாய்ப்புகளைத் தேடி அங்கும் இங்கும் அலையும் அதே நபர்தான், முனைப்பான ஒரு வேலை கிடைத்ததும் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார். மனிதன் கூட்டமாக வாழ்ந்த போது தன்னிடம் உள்ள பொருளை கொடுத்துவிட்டு, தனக்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டான். அந்தத் தேவையான பொருளைத் தேடி எட்டுத்திக்கும் திரைக்கடல் ஓடி பயணித்து இருக்கின்றான்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

 தீதின்றி வந்த பொருள்”

இக்குறட்பாவில் முறையான முறையில் திறன் பொதிந்து பொருளீட்டுதல் அறத்தையும் இன்பத்தையும் தரும், தீய வழியில் அல்லாது நேரிய வழியில் வரும் செல்வம் நம்மை மகிழ்விக்கும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

இப்படி பொருளீட்ட பல்வேறு இடங்களுக்கு மறுப்பும், வெறுப்பும் இருந்தாலும் அதை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து கடல் கடந்து பயணித்த மனிதன், இன்று இருக்கும் இடத்தில் இருந்து வேறெங்கும் மாற ஏகப்பட்ட தயக்கம். மனித வளத்துறையில் உள்ளவர்களுக்கு இது மாபெரும் சிக்கலாக பல நேரங்களில் உருவெடுக்கும். வேலை தந்தால் போதும் எனும் வேண்டுதலோடு வருபவர்கள் பிறகு அந்தப் பணிவு வார்த்தையை மறந்து விடுவதோடு அல்லாமல் யார் வேலை தந்தார்களோ அவர்களுக்கு எதிர்ப்பாகவும் மாறும் நிலை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். சில இடங்களில் பிரச்சனைக்குரிய பணியாளர்களை வஞ்சிப்பதற்கென்றே இந்த இடமாறுதல் (Job Relocation) தூண்டப்படும். ஒருசிலரை தங்களது வழிக்குக் கொண்டுவரவும் இவ்வாறான ஒரு பயமுறுத்தலை மனித வளத்துறை மூலம் காண்பிப்பதுண்டு. இவை எல்லாவற்றையும் தாண்டி தனது பணி உயர்வுக்கான மாறுதல் வரும்போது அதை விருப்பமுடன் ஏற்று அதில் வெற்றி காணும் மனநிலை குறைந்து விட்டது என்பது வருத்தம்தான். எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு பெரு நிறுவனத்தில் நல்ல உயர் பொறுப்பில் இருக்கிறார், அவர் தனக்கான இடமாறுதலை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று விட்டார். ஏன் என்று கேட்டபோது, வீட்டுல தொல்ல தங்க முடியல அதான் கொஞ்சம் தூரமா போயி இருக்கலாம் என்றார். இப்படியும் சிலர் உண்டு, இதுபோன்ற காரணத்தை மனித வளத்துறையினரிடம் நேரடியாகவே சொல்லி இடமாறுதல் கேட்பவர்கள் உண்டு. மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் கேட்டதை செய்து கொடுப்பதே நல்லது.

இடமாறுவதால் ஏகப்பட்ட சிக்கல்கள் என திருமணம் ஆன பணியாளர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், ஏனென்றால் அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் மற்றும் அர்பணிப்புகள் இருக்கும். ஆனால் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண் பணியாளர்கள் கூட இடம்மாறி வேலை செய்து மற்றொரு உயர்வு நிலையை அடைய வேண்டும் எனும் எண்ணம் இப்போது குறுகிவிட்டது. இதை இடமாறு தோற்றப்பிழை என்று சொல்வதில் தவறேதும் இல்லை. அறிவியல் அடிப்படையில் ஒரு பொருளை சரியான பார்வையில் பார்த்தால்தான் அதன் அளவீட்டையும், இருப்பையும் சரியாக கணக்கிட முடியும். இல்லையென்றால் தப்புக்கணக்குதான் வரும், அதுபோல தன் உயர்வுக்கான நிலையை கண்டுணர சரியான பார்வையை, சரியான அணுகுமுறையை மற்றும் சரியான புரிதலுணர்வை நாம் வளர்த்தெடுப்பது அவசியம். அப்படி ஒரு புரிதலுணர்வை நாம் ஏற்படுத்திக் கொண்டால் எந்த இடம் மாறினாலும். தடுமாறாமல் நமக்கான முன்னேற்றத்தை வென்றெடுக்க முடியும்.

நம் வாழ்க்கை என்பது பொருள் நிறைந்தது, பொருளால் மட்டுமே நிறைந்தது அல்ல என்பதை நினைக்கும் போது வாழ்க்கை சிறக்கும்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *