HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 61

நிலவைத் தேடும் வானம்

சென்றவாரம் வெளியான “விட்டு விலகி நிற்போம்” தொடரைப் படித்து விட்டு ஏகப்பட்ட கேள்விகள் வந்தன, அதிலும் குறிப்பாக மாணவர்களிடம் இருந்து வந்தது கண்டு பெரு மகிழ்ச்சி. வளரும் தலைமுறையிடம் இருந்து வளர்ச்சிக்கான கேள்விகள் வருவது எவ்வளவு இனிமையானது. அந்தக் கேள்வியில் “பின் வாங்குதல் நம் வாழ்க்கையில் அவசியமா? ஒன்றை அடைய நாம் பெரு முயற்சி எடுத்து செல்லும் போது சில இளைப்பாறுதல் இருக்கலாம், பின்வாங்கல் இருந்தால் நம் குறிக்கோளை சிதைத்து விடாதா? எனும் கேள்விகள் வந்த வண்ணம் இருந்தது. பின்வாங்கல் என்பது நாம் எடுத்திருக்கும் முயற்சியில் இருந்து அல்ல, மாறாக அதை அடைய மேற்கொண்ட வழிமுறைகளில் சில பின்வாங்கல் இருப்பது அவசியம்தான். நல்ல குறிக்கோளை நோக்கி பயணிக்கும்போது, எல்லாரும் ஓடிவந்து ஒன்றுசேர மாட்டார்கள், சில எதிர்ப்புகள், மனக்கசப்புகள் இருக்கும், எதிர்ப்பவர்களின் நிலைக்கு ஈடுகொடுக்க சில பின்வாங்கலும் அவசியம்தான். அதற்கு சிறந்த உதாரணம் கராத்தே. பின் வைக்கும் பின்னங்காலில் இருந்துதான், எதிரிக்கு தர வேண்டிய அத்தனை அடிகளும் கிடைக்கும். தேவையான தருணத்தில், பின்வாங்கலும், இளைப்பாறுதலும் அவசியம்தான்.

நிலவைத் தேடும் வானம், ஏதோ கவிதை போலத் தெரிகிறதே என என்ன வேண்டாம். பரந்த பரப்புடைய வானம் சிறு நிலாவைத் தேடும் காரணம் என்ன என்று யோசிப்போம். நிலவைப் பற்றி முடிந்தளவு நம் கவிஞர்கள் எவ்வளவு பாட முடியுமோ அவ்வவளவு பாடி விட்டார்கள், நிலவைப் பார்த்து வானம் சொன்னது… தொடங்கி, நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டிவை.. எனும் பாடல் வரைக்கும் அந்த நிலவை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். பெரிய பரப்பளவாக நமக்குத் தெரியும் வானதைவிட, அதில் சிறுபொட்டுவைத்தது வைத்தது போல இருக்கும் நிலவுதான் எல்லார் மனதிலும் பொசுக்கென்று இடம்பெறுகிறது. அதுபோலத்தான், பரந்துபட்ட இந்தப் பூமிப்பந்தில் சிலநூறு மனிதர்கள்தான் சிறப்பான நிலையை அடைகின்றனர். வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டோம் எனும் ஒரே காரணத்திற்காக எல்லா உயர்வும் வந்துவிடாது. இடைவிடா முயற்சியும், எண்ணித்துணியும் பேராற்றலும் தான் அதற்கு முழுமுதற் காரணம்.

அதற்கடுத்தபடியாக நம்மை நல்வழிப்படுத்தும் நலவிரும்பிகள் (Wellwishers) மற்றும் Mentor என்று அழைக்கக்கூடிய மதியுரை மனிதர்கள் அவசியம், இந்த மதியுரை மனிதர்கள் பெரும்பாலும் நம் வயதைவிட குறைந்தது 5 வருடமாவது முன்னோக்கி இருந்தால் நல்லதாம். நம்மை நல்வழிப் படுத்துதல் தொடங்கி, நமது வேலையில் அடுத்தடுத்து நாம் காணும் ஏற்றத்திற்கு இவர்களின் ஒத்துழைப்பு அவசியம். வேலைபார்க்கும் இடத்தில் இம்மாதிரியான மனிதர்களை நாம் அடையாளம் கண்டு நம் வளர்ச்சிக்கு உதவ நாம் முயற்சி எடுக்க வேண்டும், அதற்காக அவர்களை காக்கா பிடிக்கவேண்டும் எனும் வேறு அர்த்தத்தில் பொருள்கொள்ளாது சரியான பதத்தில் இதை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏதோ ஒரு  வாய்ப்பு நமக்கு வந்துவிடாதா, நம் வாழ்வில் ஒரு உயர்வு கிடைத்து விடாதா எனும் ஏக்கம் இருக்கும், அப்படிப்பட்டவர்கள், தன் உயர்வுக்கான தேடலில் நிலவைத் தேடுகிறேன் எனும் பெயரில் விண்மீன்களைக் கூட பிடிக்காமல் விட்டு விடுவார்கள். Head Hunting, Body shopping என்று மனிதவளத்துறையில் அழைப்பதுண்டு, வேலை கிடைக்கவில்லை என்ற குரலும், இந்த வேலைக்கு தகுதியான நபர் இன்னும் கிடைக்கவில்லை எனும் குரலும் ஒருசேர ஒலிக்கத்தான் செய்கிறது. இது ஒரு நகைமுரணாக இருக்கலாம், ஆனால் இதுதான் நடைமுறை உண்மை. இதை எப்படி சரி செய்வது. நியூட்டன் அவர்களிடம், எப்படி புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தீர்கள் எனக் கேட்கும்போது, அதைப்பற்றி மட்டுமே சிந்தித்தேன், ஆதலால் அதை அடையமுடிந்தது, என்று ஓர் எளிமையான பதிலை சொன்னாராம், இதில் எவ்வளவு ஆழம் பொதிந்துள்ளது என்பதை நாம் உணர முற்படுவோம்.

எதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோமோ அதுவாக மாற அத்துணை வாய்ப்பும் உண்டு எனும் உளவியல் கருத்தை இங்கு பொருத்திப்பார்ப்போம். Head Hunting என்பது, ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்புக்கு தேவையான நபரை சில நேரங்களில் சல்லடை போட்டு தேடித் பார்த்தாலும் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும், அப்படி சரியான நபரை கண்டுகொண்டு அவரை அந்தப்பொறுப்புக்கு கொண்டுவரும் நடைமுறைதான் இது. Body Shopping என்பது ஒரு குறிப்பிட்ட  வேலைக்கு அதிகமான நபர்கள் தேவைப்படும் போது நடைமுறை படுத்தப்படும் ஒரு செயல்முறை. இந்த இரு செயல்பாடுகளும் எனக்கு எப்படித் தெரியும். ஒன்று நம்மைத்தேடி வரவைப்பது அல்லது நாம் அதைத் தேடிப்போவது. நம்மைத் தேடி வர வைப்பது என்பது, நாம் வேலை செய்யும் துறையில் சிறந்து விளங்குவதன் மூலம் நடைபெறும். நாம் தேடிப் போவது என்பது, தெரிந்த நட்பு வட்டம் மூலம் அதை அடைவது. இதில் முதலாவது நடைமுறைய நமக்கு அதிக பலனைத் தரும். இதை எல்லாம் நமதாக்க என்ன செய்வது, நமக்கு தேவையற்றது எவை எவை என்பதை முதலில் கணக்கெடுங்கள், அவற்றை களைய முற்படுங்கள் தேவையானது தேடி வரும், எப்படி?  கல்லில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கித்தான் சிற்பத்தை தருகிறார் சிற்பி. நாம் ஒவ்வொருவரும் ஒரு சிற்பிதான். வாழ்க்கை எனும் சிற்பத்தை உருவாக்கும் முழு ஆற்றல் நமக்கு உள்ளது என்பதை நம்புவோம். செயல் படுத்துவோம், வெற்றி காண்போம்.

எதுவும் தாமதமாகி விடவில்லை, இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு போய்விட முடியும். – வண்ணதாசன்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *