HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 57

மனத்தடையை மாற்றி அமைப்போம்

எந்தத் திறமையும் எனக்கு இல்லை, அவனுக்கு பாரு இல்லாத திறமையே இல்லை, எல்லாத் திறமையும் எப்படி அவனுக்கு மட்டும் சாத்தியமானது, எனும் அங்கலாய்ப்பு இருப்போரை நாம் பார்த்திருப்போம். இதுதான் இவருக்கு எனும் முன்திட்டத்தோடு இயற்கை எதையும் எவருக்கும் தருவதில்லை. மாறாக நம் மனமும், எண்ணமும், சூழலும்தான் அதை வடிவமைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் மனம்தான், அதாவது மனத்தடைதான் பல தடைகளை நம் உயர்வுக்கு எதிராக உருவாக்கி விடுகிறது. ஓ அப்டியா! நான்தான் காரணமா? வேறுயாருமே காரணம் இல்லையா? வேறு பல காரணங்கள் இருந்தாலும், முழுக்காரணம் நாம்தான் என்பதை உணர்ந்து அறிந்தால் பிற காரணங்களை எளிதில் தாண்டலாம். இயற்கை எவரையும் தனிப்பட்ட விதத்தில் தண்டிப்பதில்லை, அப்படியானால் இயற்கை சீற்றங்கள் ஏன்? அது நம்மை தண்டிப்பதற்காக அல்ல, மாறாக நாம் அவற்றின் போக்கை சிதைத்ததற்காக தன்னைத்தானே சரி செய்துகொள்கிறது, அதில் நாம் சிக்கி விடுகிறோம் அவ்வளவுதான். சரி நம் தலைப்புக்குள் வருவோம்.

அதென்ன மனத்தடை? இதுதான் நம் வளர்ச்சிக்கான முக்கியத் தடையா? ஆம் இதிலென்ன சந்தேகம், மற்ற எதுவும் காரணம் இல்லையா? இருக்கிறது. பொதுவாக நமது வளர்ச்சிக்குத் தடையாக மூன்று முக்கியக் காரணிகள் இருப்பதாக உளவியல் வரிசைப்படுத்துகிறது. 

  1. இயற்கையின் தடை
  2. சூழலால் ஏற்படும் தடை
  3. மனத்தடை

இயற்கையின் தடை : இயற்கையால் ஏற்படுவது, இது முழுதுமாக நம் கையில் இல்லை, உதாரணம்- நாம் திட்டமிட்டு ஒரு இடத்திற்கு செல்ல முடிவெடுக்கிறோம், அந்நேரம் பார்த்து இயற்கைப் பேரிடரோ அல்லது வேறு சில சிக்கலோ இயற்கையால் ஏற்படும் போது அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் அதற்கு நாம் ஏதோ ஒரு வித மறைமுகக் காரணமாகக்கூட இருந்திருக்கலாம், (வெப்பநிலை மாற்றம் மனிதத் தவறுகளால் ஏற்படுகிறது) அந்த விவாதத்திற்குள் இப்போது நாம் செல்லவில்லை. எது நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையோ அது குறித்து கவலை கொள்வது நமக்கு மன அழுத்தத்தைத்தான் ஏற்படும், ஆதலால் அதை நாம் தவிர்ப்போம்.

சூழலால் ஏற்படும் தடை: நம்மை சுற்றி உள்ளவர்களால் ஏற்படும் இந்தத் தடை குறித்து சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நம் உயர்வு கண்டு பொறாமையில் சில தடைகளை ஏற்படுத்தலாம், அல்லது நாம் எங்கோ எப்போதோ உதிர்த்த சில வார்த்தைகள் மற்றும் செயல்கள் நமக்கு எதிராக மாறும் சூழல் ஏற்படும். அதை சரி செய்து நேர் செய்ய வேண்டியது நம் பொறுப்பு. இதில் பிறரை குற்றம் சொல்வதை தவிர்த்து, நம்மை சரிசெய்வதில் கவனம் கொண்டால் இத்தடையில் இருந்து மீளலாம்.  இங்கு சூழல் என்பது காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சொல்கிறேன். நமக்கு வயது எற எற, காலமே சில புரிதல்களை, மன முதிர்ச்சியைத் தரும், அதை இனங்கண்டு புரிந்துகொள்வது அவசியம். அந்தக் காலமே சில வாய்ப்புகளையும் தரும் அவற்றினை வசப்படுத்தி வளப்படுத்திக்கொள்வது நல்லது. ஆதலால் காலம் தடைகளைத் தாண்டி வாய்ப்புகளையும் தருகிறது என்பதை மனதில் இருத்துவோம்.

மனத்தடை: இதற்கு முழுக்க முழுக்க நாம்தான், நாம் மட்டுமே தான் பொறுப்பு, வேறு யாரையும் எக்காரணம் கொண்டும் குறை சொல்வது, நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் வீழ்ச்சி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பு உள்ள தொடர்களில் நாம் பேசியது போல, எல்லாத் திறமையும் எல்லாருக்குள்ளும் இருப்பதில்லை ஆனால் எதோ ஒரு திறமை நமக்குள்ளே இருக்கும் அதை அடையாளம் கண்டு மிளிர வைக்க வேண்டியது நம் பொறுப்பு. ஏதோ சாக்குப்போக்கு சொல்லி பல உயர்வுகளை நாமே தடை செய்திருப்போம் அல்லது வாய்ப்புகளை இழந்திருப்போம். அவற்றை இப்போது நினைவு கூர்ந்து, புத்துணர்வு பெற வைப்போம்.

பணத்தடை என்பது யாருக்கும் எப்போதும் இருந்ததில்லை, மனத்தடைதான், இதென்ன புதுக்கதையா இருக்கே என ஆச்சர்யம் கொள்ளவேண்டாம். தினம் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பவர் கூட தனது குடும்பத்தை நிம்மதியாக, மன நிறைவாக நடத்த முடிகிறது. தினம் 1000/-, 1 லட்சம் என வித விதமாக பல தொகைகளில் சம்பாதிப்பவரும் தன் குடும்பத்தை திறம்பட நடத்துகிறார், அப்படியானால் எங்கு இந்த சிக்கல்?. மனத்தில் தான், நம் எண்ணத்தில்தான். நம் வாழ்க்கைத் தரம் உயர உயர நம் தேவைகளும், சில சமூகத் தகுதிநிலையும் (அந்தஸ்து) தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நாமும் அந்த உயர் சமூக நிலைக்கு வரவேண்டும் என்றால், முதலில் நாம் உண்டாக்கி வைத்திருக்கும் தடைகளை உடைப்போம். இல்லையெனில் இருக்கின்ற நிலையிலேயே திருப்தி அடைந்து வாழ்க்கையை நகர்த்த வேண்டியதாகிவிடும்.

நிறுவனங்களில் பல புதுப்புது நடைமுறைகள் மற்றும் மாற்று முறைகளை மனிதவளத்துறை பகுத்தும் போது, எல்லோரும் கைதட்டி வரவேற்பது கிடையாது. எதிர்ப்புகள் ஆங்காங்கே விதவிதமாக முளைக்கும். அதை முறையாகப் புரிந்துகொண்டு, அவர்களது மனத்தடையை உடைத்து புரிதல் வளையத்திற்குள் கொண்டுவர மனிதவளத்துறையில் உள்ளவர்கள் பல முயற்சிகள் எடுப்பதுண்டு. மனித மனங்களை புரிய இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் அதன் முக்கியத்துவத்தை நாம் ரசிக்க முடியாது. ஆதலால் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே எளிதில் கிடைப்பதில்லை, ஆனால் அதை அடைவதற்கான வழிகளை நம்மால் எளிமையாக்க முடியும், அதற்கு நாம் நமக்குள் கட்டமைத்து வைத்திருக்கும், பிறரை மற்றும் பிறவற்றைப் பற்றிய முன் தீர்மானங்களை, வெறுப்புணர்வுகளை கடந்து வரும்போது தடைகள் தானாக உடையும், வழிகள் வலிமையாகும். மனித மனங்களை புரியவும், அறியவும் ஆரம்பியுங்கள், வாழ்க்கை நமக்கு சுவைபட மாற ஆரம்பிக்கும்.

நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதை முதலில் தீர்க்கமாக முடிவெடுங்கள், பிறகு தடைகள் தானாகத் தகர்ந்து வழிகள் தெரிவதை உணர்வீர்கள்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *