HR உன்ன கூப்பிடுறார்… (26)

தகுதிக்குத் தலைவணங்கு

என்னயப்பத்தி பேச உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு? இந்தக் கேள்வியை பல இடங்களில் / நேரங்களில் நாம் கேட்டிருப்போம். அதென்ன தகுதி? ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு (முன்னேற்ற நிலைக்கு) நம்மை மேம்படுத்துதலே தகுதி எனப்படுகிறது. மேன்மை அடைதல் என சுருங்கப் பொருள்கொள்ளலாம். பரிந்துரையின் அடிப்படையில் ஒரு இடத்திற்கு நாம் வந்துவிட்டாலும், அந்த வேலைக்கான/ இடத்திற்கான தகுதி நம்மிடம் இல்லையென்றால் அது முற்றிலும் வீண்தான், மேலும் அது ஒரு கேலிப்பொருளாக மாறிவிடும். தகுதி என்பது பிறப்பின் அடிப்படையில் என இங்கு நான் பேசவில்லை, மாறாக, அன்பால், பண்பால், அறிவால் மற்றும் ஆற்றலால் நாம் காட்டும் மேன்மையைப் பற்றித்தான் பேச முற்படுகிறேன்.

Wipro NTH Recruitment Process 2022 For Freshers (Updated)| PrepInsta

மேன்மை அடைதலோடு நம்மைச் செம்மைப்படுத்துதலும் இந்த தகுதிக்குள் அடங்கியுள்ளது. சரியான முடிவெடுத்தல்,புதிய முறைகளைக் கையாளுதல், ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்துக்கொள்தல் மற்றும் துணிந்து செயல்படுதல் (Taking Risks) போன்ற மையக் கூறுகள் நம்மிடம் இருந்தால் நாமும் தகுதியான தலைவன்தான். தலைவனாகும் எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கும், ஆனால் தலைவனாகும் தகுதி நமக்குள் உள்ளதா? இல்லையெனில் கவலைவேண்டாம், அதை வளர்த்தெடுப்பது ஒன்றும் கடினமானதல்ல, அந்த தனிமனிதத் தகுதிகளை நாம் பெற உளவியல் அடிப்படையில் 5 காரணிகளைச் சொல்லியிருக்கிறார்கள் ட்யூப்ஸ் மற்றும் கிறிஸ்டல், இந்தக் காரணிகள் பலமுறை பலரால் சிறு சிறு மாற்றங்களைக் கண்டு முழுமை பெற்றுள்ளது, தொடங்கியது இவர்களால் என்பதால் இவர்களது பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

Wipro NTH Recruitment Process 2022 For Freshers (Updated)| PrepInsta

என்ன அந்த 5 காரணிகள் வாருங்கள் ஒரு கை பார்த்துவிடலாம். அதற்கு முன், தகுதிகள் தெரியும் அதென்ன தனி மனிதத் தகுதிகள், ஆம், Personal Traits என்று சொல்லக்கூடிய இந்த தனி மனிதத் தகுதிகள் தான் நம்மை பிறரிடம் இருந்து வேறுபடுத்தியும், மாறுபடுத்தியும் காட்டுகிறது. இவனிடம் இந்த வேலையைக் கொடு என்று சொல்வதும், இவனிடம் மட்டும் இந்த வேலையை மறந்தும் கொடுத்துறாத என சொல்ல வைப்பதும் இந்த தனி மனிதத் தகுதிகள் தான். இதுதான் நமக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் தருகிறது. இது முழுக்க முழுக்க நம் பொறுப்புதான். பிறரை குறைசொல்வதை விட நம்மை நெறிப்படுத்தி சீர்படுத்துவதே தலையாய கடமை. இதைப்பற்றி “தெரிந்து வினையாடல்” அதிகாரத்தில் மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார் நம் திருவள்ளுவர்.

அந்த 5 காரணிகளின் கருத்தாக்கம் இதுதான் (5 ஆளுமைப் பண்புகள்):

திறந்த மனப்பான்மை (Openness) – பலதரப்பட்ட எண்ணங்களையும், மனிதர்களையும், பண்பாட்டுக்கூறுகளையும் உள்ளவர்களைத்தான் நாம் தினமும் சந்திக்கிறோம், அவர்களிடம் திறந்த மனப்பான்மையோடு அணுகும் எண்ணம் தான் வெற்றிபெறும். இந்த அணுகுமுறைதான் பல நல்ல அனுபவங்களையும், மாற்றத்தையும் நமக்குள் ஏற்படுத்தும்.

மனசாட்சிக்கு மதிப்பளித்தல் (Conscientiousness) – திறந்த மனநிலை என்பதற்காக கட்டுப்பாடின்றி அலைவது எனும் கோணத்தில் எடுத்துவிடாது, சில எல்லைகளை நாம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும், அந்த எல்லைகளை நாம் தொடாதவரை தொல்லைகள் இல்லை. அவற்றில் நாம் மிகுந்த கவனம் கொண்டிருத்தல் வேண்டும். மொத்தத்தில் கட்டுப்பாடுள்ள விடுதலைப் பறவையாக நாம் இருக்கவேண்டும். எல்லாவற்றிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையை நாம் கடைபிடிக்க வேண்டும். அந்த நிலையை நம் மனமே பலநேரம் எச்சரிக்கும், அதற்கு மதிப்பளித்தால், பிறர் நமக்கு மதிப்பளிப்பார்கள்.

முன்னெடுத்து செயல்படும் ஆளுமை (Extraversion) – எதையும் எடுத்து செயல்படுத்தும் ஆற்றலும், உந்துதலும் இருக்கவேண்டும், அது நம்மை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்திருக்கும் மேலும் நேர்மறை உணர்ச்சிகளை தந்துகொண்டேயிருக்கும். குறுகிய வட்டத்துக்குள் நம்மை அடைத்துவிடாமல் பரந்துபட்ட எண்ணம்கொண்டு செயல்படவேண்டும்.

ஏற்றுக்கொள்ளும் மனநிலை (Agreeableness) – நம்மைவிடச் சிறப்பான கருத்தினை ஒருவர் வெளிப்படுத்தும்போது அதை சிறந்த முறையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். நட்பும், பேரன்பும் கலந்து, போட்டி மற்றும் வெறுப்பு மனப்பான்மைக்கு இடம் கொடாமல் வெளிப்படைத்தன்மையோடு நம் அணுகுமுறை இருக்கவேண்டும். பகையுணர்வு அற்று இனிய மனநிலையோடு ஒன்றித்து இருத்தல் வேண்டும்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை (Neuroticism) – எதிலும் உணர்ச்சிவயப்படாமல், பயமும், பதற்றமும் இன்றி எதையும் எதிர்கொள்ளும் உணர்வுநிலை வேண்டும். இந்த மேலோங்கிய எண்ணம் நமக்குமட்டுமல்ல நம்மை சுற்றியிருப்போருக்கும் ஒரு பாதுகாப்பைத் தரும். நம் தனிப்பட்ட கோபத்தை பிறரிடம் வெளிப்படுத்தும் போது, நம் மதிப்பை குறைக்கும். மெல்லமெல்ல மகிழ்ச்சியற்ற உணர்வுகளைத் தந்து மன அழுத்தத்திற்கு இட்டுச்செல்லும். உளவியல் மற்றும் உடலியல் நோயை நமக்கு இலவசமாகத் தந்துவிடும். உணர்வுகளை வெளிப்படுத்தும் போக்கில் நாம் கவனம் செலுத்துவது நல்லது.

கேட்பதற்கு நன்றாக உள்ளது, ஆனால் கடைப்பிடிப்பதில் நிறைய தடுமாற்றம் வருமே என நாம் எண்ணலாம். எந்த ஒரு கோட்பாட்டிலும் நாம் முழுமை அடைய முடியாது ஆனால் முழுமையை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும், அப்படிப் பயணிக்கும் போதும், முடியும் என முடிவெடுக்கும் போதும் முடித்தாகிவிட்ட எண்ணம் வரும் அது நம்மை மென்மேலும் மேம்படுத்தும். அந்த மேம்பாட்டை நோக்கி தொடர்ந்து நடைபோடுவோம்.

Contact Us | Check your eligibility for HL, HL Transfer, LAP

தகுதிக்கு மீறி ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்துவிடுகிறதே? அது தகுதிக்கு வந்த சோதனை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியே தகுதிக்கு மீறிய பொறுப்புகள் சிலருக்கு வந்ததும் தன்னை தகுதியுடையவனாக மாற்றிக்கொள்ளும் ஆற்றல் சிலரிடம் வந்துவிடும். இதில் நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோம் என்பதை நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

தலைவனாகும் தகுதி நமக்குள் உள்ளது, தேடிக் கண்டடைவோம். தகுதிக்குத் தலைவணங்கி தகுதி படைத்த தலைவனாய் மாறுவோம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. சு சுசிலா says:

    தகுதி என்ற வார்த்தையை சில நேரங்களில் படிக்காத ஆனால் வசதி படைத்த ஒருவன் கூட சொல்லி விடுகிறான். அங்கே பணம் முன் நிற்கிறது.
    ஆனாலும் விடா முயற்சி மற்றும் நம்பிக்கை மேம்படுத்தும் என்னும் உங்கள் கருத்து மிகச் சிறப்பு. பாராட்டுக்கள்

  2. Daniel Rajanyagam says:

    Good ? you are a Leader