HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 77

நினைவு தெளியட்டும்

வேலையில நெனப்பு இருக்கணும் அப்பத்தான் ஒழுங்கா முடிக்க முடியும். நெனப்ப எங்கேயோ வச்சுக்கிட்டு இங்க என்ன துலாவிட்டு இருக்க. இப்பத்தான் உன்ன பத்தி நெனச்சேன் நீயே வந்துட்ட. எப்பவும் ஒரே நெனப்பா இரு அலைபாய்ஞ்சுட்டு திரியாத. இதுபோல இன்னும் பல நினைவு அல்லது நெனப்ப பற்றிய வார்த்தைகளைக் கேட்டிருப்போம். இதெல்லாம் கொஞ்சம் உளவியலோடு தொடர்புடையது. ஆழமாகப் பார்த்தால் அனைத்தும் அர்த்தம் பொதிந்ததாய் இருக்கும். இந்த நினைவு பல வகைகளில் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பயணிக்கக் கூடியது. நினைவால் மேலெழுந்தவர்களும் உண்டு, நினைவாலே நினைவாகிப் போனவர்களும் உண்டு.

ஏமாற்றுவோருக்கு மறதி அதிகம், நேசித்தவர்களுக்கு நினைவுகள் அதிகம் எனும் சொல்லாடலை நாம் கேட்டிருப்போம், மறதியும், நினைவும் மாறி மாறி நம்மை வாட்டி வதைப்பதுண்டு. நாம் அதில் வதை படும் உள்ளமா அல்லது விதைபடும் உள்ளமா என்பது நாம் அவற்றை கையாளும் விதத்தால் அமையும் என்று எனக்கு நெருங்கிய உளவியல் நண்பர் ஒருவர் கூறினார், இது முற்றிலும் உண்மை. எதோ ஒரு நிகழ்வு மூலம் அதனுள்ளே கிடந்து வெளிவர முடியாமல் அல்லது வெளிவர விருப்பம் இல்லாமல் வாழ்க்கையை வீணாக்கியோர் பலர் உண்டு. எது நடந்தாலும் அடுத்தது எனக்காக ஒன்று காத்திருக்கிறது, அதை நோக்கி எனது பயணம் அமையட்டும் எனும் எண்ணத்தோடு நாம் பயணிக்க வேண்டுமாம் அதுதான் நம்மை சோர்வடைய விடாமல் தூக்கிப் பிடிக்கும்.

நினைவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என நீங்கள் கேட்கலாம். காலங்கள் கடந்தும் காலாவதி ஆகிவிடாத மருந்து, அன்பானவர்களின் அழகான நினைவுகள் மட்டுமே..! வருடங்கள் கடந்தும் வரையறைக்குள் வராத ஒன்று உண்டென்றால் அது நினைவு மட்டுமே.

நம்மில் பலர் முடிந்ததையும், இழந்ததையும் பற்றி அதிகம் பேசுவதும் சிந்திப்பதுமாகவே இருப்பர், இது எந்த அளவிற்கு அவர்களது அடுத்த கட்ட வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரியவில்லை. நான் இதற்கு முன் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்தபோது சந்தித்த ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்த 26 வயதுள்ள ஒரு பணியாளர் நன்றாக வேலை செய்யக்கூடியவர், ஆனால் சில நேரங்களில் ஏதோ ஒன்றை தொலைத்தது போல ஒரு பற்றற்ற மனநிலையில் இருப்பார். எல்லாரிடமும் கலகலவென பேசக்கூடியவர்தான் ஆனால் சில நேரங்களில் அதற்கு எதிர்மறையாக நடந்து கொள்வார். இது அவரோடு வேலை பார்த்த சக பணியாளர்கள் மத்தியில் சற்று வியப்பும் அச்சமும் தருவதாக இருந்தது.

இது நாளடைவில் பிரச்சனையாக மாறி என்னிடம் கொண்டு வரப்பட்டது. அவரைப் பற்றிய குறை வந்த உடனே அவரை கூப்பிட்டு பேசவில்லை, மாறாக அவர் அறியாமலே அவரைப் பற்றி அறிய முற்பட்டேன். அதன் முயற்சியாக ஒருநாள் ஏன் இவர் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். வெவ்வேறு எண்களை ஒரு தாளில் அல்லது அவர் வேலை செய்யும் மடிக்கணினியில் அடிக்கடி கூட்டிக் கூட்டி பார்ப்பார். என்னவென்றால், அவர் மிக நன்றாக படிக்கக் கூடியவர், 10ம் வகுப்பில் 90% மதிப்பெண் எடுத்தவர். ஆனால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரத்தில் உடல் நிலை சற்று சரியில்லாத காரணத்தால் 68% மதிப்பெண்தான் எடுக்க முடிந்ததாம். அது இவரது மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்டது. இதுதான் அவரது பிரச்னை என்பதை அறிந்துகொண்டேன்,

அவரிடம் பேச்சு கொடுத்ததில் மூலம், குறைவான மதிப்பெண் எடுத்ததால் உண்டான மனக்காயத்தில் இருந்து மீண்டுவர இயலா உணர்வை வெளிப்படுத்தினர். அந்த நினைவு அவர் மனதில் இறக்கி வைக்க முடியாத பாரமாகி இருத்தது, சிலபல உதாரணங்களை மேற்கோள் காட்டி, நினைவு என்பது நமக்கு வேண்டும். அது நமக்கு ஓர் உந்துதல் தந்து முன்னேற்றம் தரும் விதத்தில் அமைந்தால் நல்லது, ஆனால் நம்மை பழைய நினைவுகளில் உழல வைத்து பின்னோக்கி இழுத்தால் அதை உதறிவிட்டு நினைவு தெளிவு காண்பதுதான் சிறந்த அணுகுமுறை என்று விளக்கியதன் மூலம் அவரிடம் அடுத்தடுத்த மாற்றங்கள் தென்பட்டது.

இன்னொரு உதாரணம், இதை உதாரணம் என சொல்வதை விட உதார் விடும் ரகம் என்று சொல்வது சரியாக இருக்கும் என நினைக்கிறன். நேர்முகத் தேர்வில் நன்கு பதிலளித்து வேலைக்கான பணியாணையைப் பெற்று வேலைக்கு வந்த ஒருவரைப் பற்றித்தான் இங்கு பேசுகிறேன். அவர் பல்கலை அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர். வேலைக்கு வந்து விட்டார், வேலையில் சேர்ந்த பிறகு 5 மாதமாக அவருக்கு கொடுக்கப்பட்ட எந்த வேலையையும் சரிவர செய்யவே இல்லை. கேட்டால் நான் Gold Medal வாங்குனவன் தெரியுமா.! எனும் பதில் மட்டுமே அவரிடம் இருந்து வந்தது. அதை நாம் மறுக்கவில்லை. அதே நேரத்தில் வேலைக்கு சேர்ந்த இடத்தில தரப்படும் வேலையை சரிவர செய்து கொடுப்பதை விட்டுவிட்டு வேறெது பேசினாலும் அது கணக்கில் வராது என்பதை அவருக்கு புரிய வைத்து, கடந்த கால நினைவில் இருந்து மீட்டு நிகழ்கால நிகழ்விற்கு வர வைத்ததில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் ஏற்பட்டது. அவர் இப்போது ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பது எனக்குப் பெருமைதான். இப்படி பல சுவைமிகு நிகழ்வுகள் மனித வளத்துறையில் உள்ளவர்களுக்கு நிகழும். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அணுகுமுறையால் பொருள்ளதாகவும் மாறும்.

உதவி பெற்றவருக்கு மறதி அதிகம், உதவி செய்தவருக்கு நினைவு அதிகம்..! நினைவு தெளியட்டும்..!

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. கோவி. சேகர் says:

    எதோ ஒரு நிகழ்வு மூலம் அதனுள்ளே கிடந்து வெளிவர முடியாமல் அல்லது வெளிவர விருப்பம் இல்லாமல் வாழ்க்கையை வீணாக்கியோர் பலர் உண்டு. எது நடந்தாலும் அடுத்தது எனக்காக ஒன்று காத்திருக்கிறது, அதை நோக்கி எனது பயணம் அமையட்டும் எனும் எண்ணத்தோடு நாம் பயணிக்க வேண்டுமாம் அதுதான் நம்மை சோர்வடைய விடாமல் தூக்கிப் பிடிக்கும்.
    மிகவும் சிறப்பான கருத்து. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…