HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 75

எனக்கென ஒரு நண்பன்

நட்பைப் பற்றி பேச ஆரம்பித்தாலே, நண்பன் ஒருவன் வந்தபிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு எனும் வாலிபக் கவிஞர் வாலியின் வரிகள் நம்முன் நடனமாடும். அப்படி என்ன பெரிய முக்கியத்துவம் இந்த நண்பன் எனும் நட்பு வட்டத்திற்கு. நம் வாழ்க்கையில் நண்பர்களுக்கு தவிர்க்க இயலா இடம் உண்டு. அவற்றின் முக்கியத்துவத்தை வகைப்படுத்தவும், மிகைப்படுத்தவும் முடியுமா? என்றால் சற்றுக் கடினம் தான். ஒவ்வொருவருக்கும் அது வேறுபடும். நம் வாழ்வில் உறவினர்கள் என்பது நாம் விருப்புகிறோமோ இல்லையோ ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் நண்பர்கள் அப்படி இல்லை, அது நாமாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நிறைந்தது. நாம் ஏதாவது தவறிழைக்கும் போது “சேர்க்கை சரியில்ல அதான் இப்படி நடந்துக்கிறான்” என்று அங்கு சுட்டிகாட்டப் படுவது நட்பு வட்டத்தைத்தான். உணர்ச்சிப் பூர்வமாக நாம் அணுகும் முதல் நபராக நண்பன் தான் இருக்க முடியும். 

உளவியல் அடிப்படையில் பார்க்கும்போது, ஒத்த வயதுடைய (இதை Peer Group என்று அழைப்பதுண்டு) நபர்களின் தாக்கம்தான் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது பழகும் முறையினால் அமையும். பதின்ம வயதைத் தாண்டியதும், எதுவானாலும் நாம் முதலில் அணுகும் நபர்கள் நம் நட்பு வட்டம்தான். அவர்களிடம்தான் நாம் மனம்விட்டு பேசும் வாய்ப்பு அதிகம் உண்டு. வரும் பிரச்சனைகளைக் கூட அவர்களிடம் முதலில் கூறி ஆறுதல் தேடத் தோன்றும். காரணம், நம் வயதுடைய இவன் இதை எப்படி சமாளிக்கிறான் எனும் உள்ளார்ந்த எண்ணம்தான். இதில் தவறொன்றுமில்லை. அந்த நண்பன் எந்த அளவிற்கு பக்குவப்பட்டவன் என்பதை பொறுத்து உங்களுக்கான சரியான தீர்வு அமையும். இல்லையெனில் எரிதழலில் எண்ணெய் விட்டதுபோல அது கொழுந்து விட்டெரியும்.

வாழ்க்கையில் ஏதேதோ நம் கட்டுப்பாட்டில் இல்லை, அல்லது நாம் பொறுப்பேற்க முடியவில்லை. ஆனால் மூன்று விஷயங்களை நாம் சிறப்புற அமைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்புறும் என்பது நடைமுறை உண்மை. எனக்கான வேலை (பணி), எனக்கான வாழ்க்கைத் துணை, எனக்கான நட்பு வட்டம். இவை மூன்றும் முழுக்க முழுக்க நம் கையில்தான் உள்ளது. இதை சரிவர அமைத்துக்கொள்வது நம் கடமை.

நட்பு வட்டத்தை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி நான் திருவரங்கம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது எனது தமிழாசிரியர் திரு.பார்த்தலோமியு கூறியதை இங்கு நான் நினைவு கூறுகிறேன். மேலும் இந்த உவமையை கவிஞர் கண்ணதாசனும் “அர்த்தமுள்ள இந்து மதம்” எனும் நூலில் குறிப்பிட்டு இருப்பார். பனைமரம், தென்னை மரம் மற்றும் வாழை மரம் மூன்றையும் உவமையாக வைத்து ஒரு கதை கூறினார். நண்பர்கள் இந்த மரத்திற்கு ஒப்பானவர்கள்.

  • பனைமரம் – பெரும்பாலும் பராமரிப்பு எதுவும் தேவையில்லை, தானாக வளர்ந்து பிறருக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும். தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. மேலும் அதற்கான முழு வளர்ச்சியை பனைமரமே பார்த்துக்கொள்ளும். தனது அனைத்து பாகத்தையும் பயனுள்ள வகையில் எல்லா பருவங்களிலும் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிரிபார்க்காமல் நமக்கு உதவும் நண்பர்கள் இந்தப் பனைமரம் போன்றவர்கள். இப்படி ஒரு நண்பன் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதோடு நாமும் அவ்வாறு இருக்க முயல வேண்டும்.

  • தென்னை மரம் – தென்னை மரத்திற்கு சற்றுக் கவனம் செலுத்த வேண்டும். அது நம்மால் நடப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.  கொஞ்சம் பராமரிப்பு அவசியம், தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் அது நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கின்றவர்கள் தென்னை மரத்துக்கு இணையானவர்கள்.

  • வாழை மரம் –  இதற்கு அதிகப்படியான பராமரிப்பு மிக மிக அவசியம்.  நாம் தினமும் தண்ணீர் ஊற்றி, பாத்தி கட்டி நன்கு பராமரிக்க வேண்டும், அப்படி கவனித்தால் மட்டுமே நன்கு பலன் தரும். ஒருசிலரை நாம் எப்படி நடத்துகிறோமோ அப்படி தான் அவர்கள் நம்மிடம் நடந்து கொள்வார்கள் என்று இந்த உவமையை எடுத்துக் கொள்ளலாம், இன்னொன்று நம்மிடம் அதிகப்படியான பலனை எதிர்பார்த்து அது கிடைத்தால் மட்டுமே நமக்கு அவர்கள் திருப்பித் தருவார்கள். இப்படிப்பட்ட பண்பு உள்ளவர்கள் வாழை மரத்திற்கு இணையானவர்கள்.

இவற்றில் நமக்கு எப்படிப்பட்ட நண்பன் கிடைக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு, நாமும் எப்படி இருக்க வேண்டும் எனும் பொறுப்பும் கலக்கும் போது நாம் நட்பு வட்டத்தை கலக்கு கலக்கு என கலக்கி விடலாம். நாமும் இரணடர கலந்தும் விடலாம்.

நாம் பணிபுரியும் இடத்தில், நண்பன் பட்டாளம் அதிகம் உண்டு. அவற்றால் எந்த நண்பன் எனக்கானவன், எந்த நண்பன் எனக்கென்று இருந்து எதுவம் செய்யாதவன் என்பதை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றாற்போல் நாமும் இருந்து கொள்வது நல்லது. நமக்கொன்று நிகழும் போது, குடும்பத்திற்கு அடுத்த நிலையில் நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நண்பர்கள் தான். அதை மேன்மை உள்ளதாய் அமைத்துக் கொள்வதில் நமக்கு முழுப் பொறுப்பும் கடமையும் உண்டு.

நம்மை நமக்கு அடையாளம் காட்டவும், நம் குறிக்கோளை அடைய உதவவும், சமூக வட்டத்தில் நமக்கென்று நல்லதொரு நிலையை ஈட்டவும், மன அழுத்தத்தில், துன்பத்தில் நம்மோடு இருந்து பயணிக்கவும் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், நண்பன் எனும் வரவு ஒரு அர்த்தம் உள்ளதாய் இருக்கும். பணிபுரியும் இடத்தில இதன் தாக்கம் அதிகமாய் இருக்கும்.

நண்பர்களிடம் எல்லாம் சொல்லுங்கள் புரிந்து கொள்வார்கள், உறவினர்களிடம் எல்லாம் சொன்னால் புரியாமல் கொல்வார்கள்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. SUSI BELINA MARY says:

    நட்பைப் பற்றிய அருமையான ஆலோசனைகள் மற்றும் ஆய்வு. அருமை தம்பி. பனை மரம் போல நட்பு இருக்க வேண்டும். கற்றதை மறக்காமல் நினைவில் கொண்டு அதை செயலாற்றும் பதிவு மிக சிறப்பானது.

  2. சு சுசிலா says:

    எல்லா உறவுகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரியும் அல்லது மாறும் அல்லது இழக்க நேரிடும். ஆனால் நண்பர்கள் ஆயுசுக்கும் கூடவே வரும் ஒரு அற்புதமான உறவு. அருமையா சொன்னீங்க தோழர்