நாற்றமெடுக்கும் நீதி – கணேசகுமாரன்

வடைய தின்னுடான்னா ஏன்டா ஓட்டைய எண்ணிட்டு இருக்கேன்னு சொலவடை ஒண்ணு ஊர்ப்பக்கம் உண்டு. தமிழ்நாடு அரசு சமீபகாலமா அப்படித்தான் ஓட்டைய எண்ணிட்டு இருக்கு. ஆனா சொலவடைல இருக்கிற பாசிட்டிவிட்டி இல்லாம முழுக்க நெகட்டிவிட்டியா செயல்பட்டு இருக்கு. இயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரியும் விடுதலை சிகப்பி என்ற விக்னேஷ்வரன் சமீபத்தில் மேடை ஒன்றில் கவிதை வாசித்தார். மலக்குழி மரணம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை இந்துமதக் கடவுள்களை அவமதிப்பதாய் சொல்லி அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறது அரசு.

கவிதை என்ற வடிவில் முழுமை பெறாவிட்டாலும் சொல்ல வந்த கருத்து கவி அழகியல் தாண்டி பேசப்படக் கூடியது. மனிதர்கள் மலம் அள்ளக்கூடாது என்று 2011 லேயே அரசாங்கம் சட்டம் போட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகும் மலக்குழி மரணங்கள் தொடர்வது அரசாங்கத்தின் அலட்சியத்தாலும் சில மனிதர்களின் ஆதிக்க மனோபாத்தினாலும்தானே தவிர பிறிதொன்றுமில்லை.

சென்ற வருடம் வெளிவந்த விட்னஸ் திரைப்படம் இந்தக் கொடுமையைத்தான் பொட்டில் அடித்தால்போல் பேசியது. ஆனால் அந்தப் படத்துக்கு சஸ்பென்ஸ் திரில்லர் என்ற ஜானர் சாயம் பூசி என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையே மாற்றி விட்டார்கள். விட்னஸ் போன்ற படங்கள்தான் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இடம் பெற வேண்டும். ஆனால் அதற்கு லைகா வேண்டும். ஐந்நூறு கோடி பட்ஜெட் வேண்டும். இல்லாவிட்டால் இறுதிவரை நாற்றம் எடுத்துக்கொண்டுதான் இருக்கும்.

விடுதலை சிகப்பி வாசித்த கவிதையில் இடம்பெற்ற இந்து மதக் கடவுள்கலை அவர்தான் அவமதித்தாரா என்ற கேள்வி எழும்படி இப்போது அரசாங்கம் நடந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் கழுத்து நெறிபடுவது ஒருபுறமிருக்க எதனால் என்பது கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் உள்ளது. என்ன சொல்கிறார் என்பதை புறம் தள்ளி எப்படி சொல்கிறார் என்பதை முன்னிறுத்தி அபத்த வழக்கு தொடர்ந்திருக்கிறது அரசு. மனிதனை மனிதனாய் மதித்தால் போதும் எந்தக் கடவுளும் எந்தக் குழிக்குள்ளும் இறங்க வேண்டாம் என்பது எவருக்கும் புரியவில்லை. இப்போதைக்கு விக்னேஷ்வரனுக்கு ஜாமீன் அளித்திருக்கிறது நீதிமன்றம். ஆனால் என்ன குற்றம் புரிந்தோம் என்பது புரியாமலே தண்டனை அனுபவிக்கும் மனிதமனத்தின் கேள்விக்கு யார் பதில் சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *