புத்தகப் பேச்சு – கணேசகுமாரன்

சொற்ப வருடங்களுக்கு முன்பு தீவிர இலக்கிய இதழ்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே #சிறார் எழுத்துகளுக்கென்று தனியாய் பெரிதாய் கவனம் ஏதும் இல்லை. ஆனால் சமீப நாட்களில் சட்டென்று பெரும் வெளிச்சம் #சிறார் இலக்கியத்தின் மீது பாய்ந்திருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில எழுத்துகளே #சிறார் எழுத்துகளாய் முன்பு கண்ணில் தென்பட்டுக் கொண்டிருந்தது. அதிலும் பெரும்பான்மை மொழிபெயர்ப்பு வகையறா. அந்நிய நாட்டு மொழியில் சொல்லப்பட்டுக்கொண்டிருந்த நீதிக்கதைகளை அதே மொழியின் பிளாஸ்டிக் தன்மையோடு தமிழில் மொழி பெயர்த்துக்கொண்டிருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது.

குழந்தை மொழிக்கும் #சிறார் மொழிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் உணர்ந்து தற்போதைய எழுத்து வெளிப்படுகிறது. சிறந்த கதை, கவிதை, நாவல்கள் வரிசையில் சிறந்த #சிறார் எழுத்துக்கும் இப்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எழுத்தின் வகைமை அறிந்தவர்கள் #சிறார்கள் மீதான அதீத கவனத்துடன் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிதை, சிறுகதை என்ற தளங்களிலும் தன் தடம் பதிப்பதோடு #சிறார் எழுத்துக்கான பணியையும் செவ்வனே செய்துவரும் விஷ்ணுபுரம் சரவணன், உமாநாத் செல்வன் எனும் விழியன், யெஸ். பாலபாரதி, இனியன் போன்றவர்கள் #சிறார் எழுத்துகளில் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர்.

நீதிக் கதைகள் மட்டுமல்லாது காமிக்ஸ் வடிவ கதைகள் தாண்டி சமூகப் பொறுப்புடன் அதே சமயம் #சிறார்கள் மனதில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட எழுத்துதான் யெஸ். பாலபாரதியின் #மரப்பாச்சி சொன்ன ரகசியம். #சிறார் எழுத்துக்கான #சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.

சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்றாலும் பெரியவர்களுக்கான மெசேஜும் சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறது நூல். பால்ய வயதில் நிகழும் பாலியல் தொந்தரவை மையப்படுத்தி அதே சமயம் முகம் சுழிக்கா வண்ணம் நல்லதொரு நூலைத் தந்துள்ளார் யெஸ். பாலபாரதி. தமிழகத்தில் மறைந்தே போய்விட்ட #மரப்பாச்சி என்ற மர பொம்மையின் வழியே கதை சொன்ன விதத்தில் மறைந்து கொண்டிருக்கும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க முயன்றிருக்கிறார். கூடுதல் சுவாரசியத்துக்காக திணிக்கப்பட்ட பள்ளிக்கூட காட்சிகளிலும் மரப்பாச்சியின் விறுவிறுப்பு பதிந்திருப்பது எழுத்து வன்மைக்குச் சான்று.

சிறார்களுக்கு மட்டுமல்ல; #சிறார்களைக் காக்க வேண்டிய பெரியவர்களுக்குமானது நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. S BALASUBRAMANI says:

    சிறார் கதை எழுத்தாளர் உதயசங்கர் அவர்களை விட்டு விட்டீர்களே!? மரப்பாச்சி பொம்மை மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரத்தில் செய்யப் படுவது குழந்தைகளின் நலனுக்காக.