HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 55

வாழ்வாங்கு வாழ்வோம்

என்னோட வாழ்க்கையில இதுவரை உருப்படியா எதையும் சாதிச்சது இல்ல, அப்டியே ஏதாச்சும் செஞ்சாலும் நம்மள யாரும் வந்து பாராட்டப் போறதில்ல, எனும் வசனங்கள் எல்லாருக்கும் இயல்பாகவே வரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், இங்கு யாரும் இதைத்தான் நான் சாதிக்கப் பிறந்தேன் எனும் கட்டளையோடு பிறக்கவில்லை, அல்லது எப்படி எல்லாம் உயர போகப்போறேன் தெரியுமா? எனப் பிறரை ஆச்சர்யமூட்டும் விதத்தில் வரம் வாங்கி யாரும் வரவில்லை. அவரவர் வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழும் போது சாதனை மனிதர்களாக நாம் அறியப்படுகிறோம். அந்த ரசனை மிகுந்த வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுமா? அமையாது, அமைத்துக்கொள்ள வேண்டும். பிறரிடம் இருந்து நாம் மாறுபட்டும் வேறுபட்டும் நிற்பது நம் வாழ்க்கையை அழகாக்கும். அந்த அழகுதான் பலரை நம் பக்கம் இழுக்கும் வல்லமை கொண்டது. இந்த அக அழகை அழகாக்குவது நமது எண்ணங்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இதுதான் உண்மையும் கூட. இந்த உண்மையை உள்ளூர உணர ஆரம்பிக்கும் போது, நாம் வாழ்வாங்கு வாழும் உயர் நிலைக்கு உந்தப்படுவோம்.

நம் வாழ்வில் நாம் அடையும் ஒவ்வொரு வெற்றியும் தனித்துவமிக்கது. அந்தத் தனித்துவம் தான் நம்மை தனித்து அடையாளம் காட்டும். அந்த அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் நோக்கித்தான் நமது பெரும்பாலான ஓட்டம் அமைகிறது. நல்லதொரு ஓட்டத்தை நிறைவு செய்யும் நோக்கில் நான் தொடர்ந்து ஓடுகிறேன் என்று தூய பவுல் சொல்வதைப் போல, நாமும் ஒரு பெரிய கனவிற்காக அந்தக் கனவு கனிவதற்காக நமது ஓட்டத்தை ஆரம்பிப்போம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்த ஆற்றல் இருக்கும், அதை இனங்கண்டு அந்த ஆற்றலை தொடர்ந்து வளப்படுத்துவத்தின் மூலம் நாம் ஆற்றல் மிக்க மனிதராக மாறுவோம் என்று கடந்த தொடர்களில் இதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளோம். அந்த ஆற்றலை பேராற்றலாக மாற்ற பிறரின் துணையும் அவசியம் அதுதான் கூட்டு முயற்சி. இதன் அவசியத்தையும் நாம் அறிவது நலம் பயக்கும். நமது திறன் என்ன? எனக்கானது என்ன? எதை நோக்கி நான் பயணிக்கிறேன் எனும் கேள்வியும், கேள்வியைத் தொடர்ந்து பதிலும் உங்களுக்குள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வெற்றி மட்டுமே நம் வாழ்க்கை அல்ல. விரும்புகிறோமா இல்லையோ அதை நோக்கியே நாம் ஈர்க்கப்படுகிறோம். ஏனென்றால் சமூகத்தில் அதற்கான மதிப்பு அதிகம். வெற்றி தரும் புகழ் ஒருபுறம் இருந்தாலும், அது தந்த பாடம் அதை அடைவதற்கு நாம் கண்ட விடாமுயற்சி, சறுக்கல்கள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இவற்றையெல்லாம் மனதுக்குள் வைத்து செயல்படும் போது, நாம் பக்குவமிக்க அதே நேரத்தில் வாழ்வாங்கு வாழும் நிலையை எட்டிப்பிடித்து எழுச்சி காண்போம்.

நான் எடுக்காத முயற்சி இல்லை, ஆனால் வெற்றி மட்டும் எட்டாக்கனியாக எனக்கு உள்ளது, என்று சலிப்படையாமல், நாம் எய்கிற அம்பு வானத்தை நோக்கியா? அல்லது குறிப்பிட்ட இலக்கு நோக்கியா? எனத் தெளிவு காணும்போது, நமக்கான வெற்றியை நாமே வடிவமைத்துக்கொள்கிறோம். உங்களிடம் இருந்து அசைக்க முடியாத, எளிதில் கவர முடியாத திறனை வளர்க்க முற்படுங்கள், இதை சிறப்பாக இவர்தான் செய்யமுடியும் எனும் நிலை வரும்போது நீங்கள் தவிர்க்க இயலா மனிதராக மாறிவிடுவீர்கள். அண்மையில் படித்த ஒரு வாசகம் இங்கு மிகவும் பொருத்தும் என்பதால் கூறுகிறேன். தேனியிடம் இருந்து அதன் உழைப்பைத் திருடலாம், ஆனால் ஒருபோதும் தேனீயின் திறமையைத் திருடவே முடியாது எனும் வார்த்தை எவ்வளவு ஆழம் மிக்கது. நம் திறமையை நாமே அறிந்துகொள்ளும் போது அது ஆழமிக்க வேராக மாறும், நம் திறமையை இன்னொருவர் அடையாளம் காட்டும் போது அது அவ்வளவு உயிர்துடிப்பாக இருக்குமா என்பது சூழலைப்பொறுத்து. இந்த வாழ்வு என்பது என்னைப் பற்றி அறியக் கிடைத்த அரிய வாய்ப்பு இதை வளமாக்குவது என் பொறுப்பு என்பதை உணரும்போது நாம் தனித்துவமிக்க மனிதராக வாழ்வோம். அதுதான் நம் வெற்றி. அதுதான் நமக்கான வாழ்வாங்கு வாழும் நிலை.

நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைவதில் கவனமாக இருங்கள், இல்லையென்றால் எதைப் பெறுகிறீர்களோ அதை விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். – ஜார்ஜ் பெர்னாட்ஷா.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர். *கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  1. Enoch Thomas P says:

    Arumai sir..Useful one.

  2. SUSI BELINA MARY S says:

    மனதை வளப்படுத்தும் அற்புதமான நம்பிக்கையைத் தூண்டும் ஆழமான வரிகள். சிறந்த பதிவு. அருமையான கருத்துக்கள்.

  3. Chitradevivelusamy says:

    Super