தமிழகத்தை தலைநிமிர்த்திய பெரியார் போர்க்குணம் 5 – ஆதனூர் சோழன்

பிராமணரல்லாதோருக்கான
சுயமரியாதை போராட்டம்

பிராமணர் அல்லாதவர்களுக்கு ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும்.
தந்தை பெரியார் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார். அதற்கு காரணம் இருந்தது.


வைக்கம் போராட்டம் நடந்த சமயத்தில் அதுபற்றி தமிழகத்தில் ஓரிரு பத்திரிகைகள் மட்டுமே செய்தி வெளியிட்டன. அந்த போராட்டம் நடந்த சமயத்தில் ஈரோடு வந்த பெரியாரை சென்னை மாகாண அரசாங்கம் கைது செய்தபோது, அரசாங்க நடவடிக்கையை பெரும்பாலான பத்திரிகைகள் ஆதரித்து எழுதின.


எனவேதான் தனியாக பத்திரிகை தொடங்கி தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட பெரியார் விரும்பினார்.


1925 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் குடி அரசு என்ற வார இதழ் வெளிவரத் தொடங்கியது.


தேசவிடுதலை, சமூக நீதி என்ற லட்சியங்களே அவர் முன் இருந்தன. அதை மனதில் கொண்டே அவர் காங்கிரஸ் அமைப்புக்குள் செயலாற்றினார். போராடினார். ஆனால் காங்கிரஸ் அமைப்புக்குள் ஏற்பட்ட நிகழ்ச்சிப் போக்குகள் அவரது நம்பிக்கைகளைச் சிதறடிக்கத் தொடங்கின.


காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு அந்த கட்சியின் கொள்கைகளை முழுமையாக ஏற்று செயலாற்றினார்.


தன்னையும், தன் குடும்பத்தையும் முற்றிலும் அர்ப்பணித்து கொண்டார். ஆனால், ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தார். பிராமணரல்லாத மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சமநீதி, சம உரிமை, சம மதிப்பு கிடைக்க வேண்டும் என்றார்.


அந்தப் பிரச்னைகளில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கிடையாது என்பதை தெள்ளத் தெளிவாக்கினார். அது மட்டுமல்ல, ‘காங்கிரஸ் அமைப்பிலும் ஒவ்வொரு வகுப்பினருக்கும் விகிதாச்சார பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டுமென்று அவர் கோரினார்.


தந்தை பெரியார் காங்கிரசில் சேர்ந்த பிறகு 1920ஆம் ஆண்டு காங்கிரசின் மாகாண அரசியல் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது.


அந்த மாநாட்டிலேயே சட்டசபைகள் முதலிய தேர்தல் அமைப்புகளுக்கு வகுப்புவாரி பிதிநிதித்துவம் ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, அரசாங்கப் பணிகளிலும் ஜனத்தொகைக்கு தகுந்தபடி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார்.


அந்தத் தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த ராஜாஜி உள்ளிட்ட பிராமண தலைவர்கள் நிறைவேறாமல் தடுத்தனர். அவர்களுக்கு சில பிராமணரல்லாத உயர்ஜாதி தலைவர்களும் துணை போனார்கள். இது அடுத்தடுத்த மாநாடுகளிலும் தொடர்கதையானது.


இட ஒதுக்கீடு, ஆலயப் பிரவேச அனுமதி என்று சமூகநீதி தொடர்பாக பெரியார் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களையும் பிராமணத் தலைவர்கள் தோற்கடித்தார்கள்.


இந்நிலையில்தான் 1925ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 31வது சென்னை மாகாண அரசியல் மாநாடு காஞ்சிபுரத்தில் கூடியது.


இதையொட்டி பிராமணரல்லாதார் மாநாடு ஒன்றையும் தந்தை பெரியார் கூட்டினார். இந்த அரசியல் மாநாட்டிற்கு திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தலைமை வகித்தார்.
பலர் பேசியபின் இந்த பிராமணரல்லாதார் மாநாடு ஒரு முடிவெடுத்தது.


காங்கிரஸ் சட்டசபைக்குப் போவதாக இருந்தால் வேட்பாளர்கள், விகிதாச்சாரப்படி நிறுத்தப்பட வேண்டும் என்று கோரும் ஒரு தீர்மானத்தை தயாரித்தது.


இத்தகைய தீர்மானம் வருவதை காங்கிரஸ் பிராமண தலைவர்கள் விரும்பவில்லை. இதை வாக்கெடுப்புக்கு விட்டால் அது நிறைவேற்றப்பட்டுவிடும் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டனர். எனவே அதை நிராகரிக்கும்படி திரு.வி.க.விடம் கூறினார்கள்.


வரதராஜுலு நாயுடுவும் பிராமணத் தலைவர்களை ஆதரித்தார். மாநாட்டுத் தலைவராக இருந்த திரு.வி.க. இந்தத் தீர்மானத்தை முன்மொழிய அனுமதி தருவார் என்று தந்தை பெரியார் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்.


ஆனால் அவர் அந்த தீர்மானத்தை எடுக்கவேயில்லை. அதுமட்டுமின்றி தனது முடிவுரையையும் பேசத் தொடங்கினார். உரையின் முடிவில், பெரியார் கொடுத்த தீர்மானம் பொது நன்மைக்கு எதிரானது. காங்கிரசின் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமானது. எனவே, அதை அனுமதிக்க முடியாது என்று கூறி நிராகரித்து விட்டார்.


இதையடுத்து பெரியார் கோபமடைந்தார். தலைவர் திரு.வி.க.வைப் பார்த்து…


“30 பேர் கையெழுத்து கேட்டீர்கள், 50 பேர் கையெழுத்து வாங்கித் தந்தோம். இப்போது, தீர்மானம் சட்ட விரோதம் என்று கூறுவது என்ன நியாயம்?” என்று உரத்த குரலில் கேட்டார்.
இருவரும் பேசும்போது, பிராமணத் தலைவர்கள் கூச்சலிட்டார்கள்.


“தலைவர் முடிவுரை கூறியாகி விட்டது. இனி ஒன்றும் பேசமுடியாது. உட்கார்” என்று கத்தினார்கள். ஆனால் பெரியார் விடுவதாயில்லை.


“தலைவருக்கும் எனக்கும் பேச்சு நடக்கிறது. அவர் பேச வேண்டாம் என்றால் நான் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் பேசாமல் இருங்கள்” என்று பதிலுக்கு ஆவேசமாக கூறினார்.


ஆனால் அவர்களோ விடுவதாயில்லை.


“உட்கார்” என்று கத்தினார்கள்.


இதையடுத்து பெரியாரின் கோபம் உச்சக்கட்டத்தை அடைந்தது.


“சத்தம் போடுவதால் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கருதினால், நீங்கள் வெளியே போக வேண்டியதுதான். அந்த அளவுக்கு எங்களாலும் சத்தம்போட முடியும்” என்று பதிலடி கொடுத்தார்.


பிறகு தலைவர் முடிவைக் கண்டிப்பதாக கூறிவிட்டு மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.


அவரைத் தொடர்ந்து எஸ்.ராமனாதன் மற்றும் பலர் வெளியேறினர். தலைவர் திரு.வி.க.வும், ராஜாஜியும்…


‘நண்பரே, நண்பரே, போகாதீர்கள்’ என்று பெரியாரைப் பார்த்துக் கூறினார்கள். ஆனால், பெரியாரோ, அவர்களைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை.


இதைத் தொடர்ந்து உருவானதுதான் சுயமரியாதை இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *