தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய பெரியாரின் போர்க்குணம் – 3 – ஆதனூர் சோழன்

வைக்கம் போராட்டத்தில் வென்ற
பெரியாரின் வைராக்கியம்

1920 ஆம் ஆண்டு முதல் இரட்டை ஆட்சி முறை அமுலாக்கப்பட்டது.


முதல் தேர்தல் 1920 ஆம் அண்டு நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நீதிக்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.


இந்த ஆட்சியில்தான், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி ‘முதல் வகுப்புவாரி உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டது.


இரண்டாவது வகுப்புவாரி உத்தரவு 1922 ஆம்ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.


மற்றொரு முக்கியமான சட்டத்தையும் நீதிக்கட்சி அரசாங்கம் இயற்றியது. 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஆண்கள் மட்டுமே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்ற நிலை இருந்தது. பெண்களுக்கு வாக்களிக் கவோ, போட்டியிடவோ உரிமை கிடையாது.


இதை மாற்றுவதற்காக சென்னை சட்டமன்றக் கவுன்சில் நீதிக் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் நாயர் என்ற உறுப்பினர் 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். சட்டமன்றக் கவுன்சிலுக்கு வாக்களிக்கவும், போட்டியிடுவதற்கும் ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோரியது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் சட்டமாக ஆகியது.


இன்னொரு சட்டத்தின்படி மத அறக்கட்டளைகளில் உபரியாக இருக்கும் பணத்தை கல்விக்காவும், பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதார வசதி செய்து கொடுப்பதற்காகவும் பயன்படுத்தலாம் என்று கூறியது.


காங்கிரஸிலிருந்த பிராமணத் தலைவர்கள் பலர் இதை வன்மையாக எதிர்த்தனர். இது மதத்தின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சி என்று கண்டித்தனர். ஆனால் காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் நீதிக்கட்சி அரசாங்கத்தின் முடிவை முழுமனதுடன் வரவேற்றார்.


1923 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டமன்றக் கவுன்சிலுக்கு இரண்டாவது பொதுத்தேர்தல் நடைபெற் றது. நீதிக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் முன்பிருந்த உறுப்பினர் பலம் குறைந்து விட்டது.


இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. ஆனால் அது தேர்தலை புறக்கணித்ததால் நீதிக்கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வர முடிந்தது.


1924 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.


அதுவரை, திருச்சியில் இயங்கி வந்த காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்றினார். தனது இல்லத்தையே அலுவலகமாக ஆக்கிக் கொண்டார்.


அந்த ஆண்டு மே மாதம் தந்தை பெரியாருக்கு வைக்கம் நகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. பின்னர் ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த விஷயம் பின்னாளில் இந்தியாவையே திரும்பச் செய்த முக்கியமான விஷயம். அது என்ன?


திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஒரு சிறு நகரம் வைக்கம். ஈழவர்கள் என்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அந்த நகரின் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கக் கூட முடியாது.


இதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஈழவ சமுதாயத்தினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் கைதானார்கள். அவர்களை வழிநடத்திய காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்தவே ஆளில்லை என்ற நிலை உருவானது.


தந்தை பெரியார்தான் இந்த போராட்டத்தை திறமையாக நடத்துவார் என்று கேரளா காங்கிரஸ் தலைவர்களான பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவ மேனனும் முடிவெடுத்தார்கள். இருவரும் இணைந்து கையொப்பமிட்டு தந்தை பெரியாருக்கு கடிதம் அனுப்பினார்கள்.


இந்தக் கடிதம் ஈரோட்டுக்கு வந்த நேரத்தில் தந்தை பெரியார் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். தேனி அருகே பண்ணைப்புரத்தில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் கடிதம் அவர் கையில் கிடைத்தது.


கடிதத்தைப் படித்த பெரியார் தன் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்து விட்டு உடனே ஈரோட்டுக்குத் திரும்பினார். தான் திரும்பி வரும் வரையில் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டு ராஜாஜிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.


இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு வைக்கம் சென்றார். அங்கு திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து அவரை வரவேற்க ஆட்கள் வந்தார்கள். அதாவது, நாயக்கரை சமாதானப் படுத்த மகாராஜா முயற்சி செய்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தினர் பெரியார் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர்கள். பெரியார் வீட்டில் தங்கும் அளவுக்கு நெருக்கமானவர்கள்.


ஆனாலும் தந்தை பெரியார் ஒரு முடிவெடுத்து விட்டால், பிறகு, அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். மகாராஜா பேச்சையா கேட்பார்.


வைக்கம் நகரில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் சில நாட்கள் ஆவேசமாக பேசினார். அவர்கள் எழுச்சி அடைந்தார்கள்.


மகாராஜா ஒரு வாரம் பொறுத்திருந்தார். விஷயம் விபரீதமாகப் போய்க் கொண்டிருந்தது. இதையடுத்து வைக்கம் நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்தார். சட்டத்தை மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட பெரியாரும், அவரது நண்பர்களும் சட்டத்தை மீறி பேசி கைதானார்கள். அவர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட பெரியாரின் மனைவி நாகம்மாளும், சகோதரி கண்ணம்மாளும் வேறு சிலருடன் வைக்கம் நகரத்திற்கு வந்து பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர்.


பெரியாருடைய போராட்டத்தை நிறுத்த ராஜாஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களால் முடியவில்லை. காந்தியும்கூட இந்த போராட்டத்தை ஆதரிக்க முன்வரவில்லை.


பெரியார் சிறையிலிருந்து விடுதலையானதும் மீண்டும் அங்கேயே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். காந்தியின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு இல்லை என்பதைக் கண்ட அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்தமுறை 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார்கள். அதாவது, கைகளிலும் கால்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டார்.


இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தந்தை பெரியார் சிறையிலேயே இறக்க வேண்டும் என்று உயர்சாதியினர் யாகம் நடத்தினார்கள். ஆனால், சில நாட்களில் மகாராஜா மரணமடைந்தார்.


இந்தச் செய்திகளை வெளியிலிருந்து பெரியாரை சந்திக்க வந்த காங்கிரஸார் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அவர்களிடம்..


“இதில் மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. யாகம் செய்வதால் நான் இறந்துவிடுவேன் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ, யாகம் செய்ததால் மகாராஜா இறந்துவிட்டார் என்பதும் மிகப்பெரிய முட்டாள்தனம்” என்றார்.

பெரியாருக்கு எதிரான ராஜாஜி சதி

மகாராஜாவின் மரணத்தைத் தொடர்ந்து போராட்டத்தில் கைதானவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களோடு உடன்பாடு செய்ய ராணி விருப்பம் தெரிவித்தார். பெரியாருக்கும் ராணிக்கும் இடையே உடன்பாடு ஏற்பாடுவதை சமஸ்தான திவான் விரும்பவில்லை, அப்படி நடந்தால் பெரியாருக்கு பெருமை வந்து சேர்ந்துவிடும் என்று நினைத்தார். எனவே, இதை தடுக்கும்படி ராஜாஜிக்கு கடிதம் எழுதினார்.

அதைத்தொடர்ந்து ராஜாஜி, காந்திக்கு கடிதம் எழுதி வைக்கத்திற்கு வரும்படி கோரினார்.
வைக்கம் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் தன் தாயாரைக் காண்பதற்காக தந்தை பெரியார் ஈரோடுக்குத் திரும்பி வந்தார். ஆனால், ஈரோடு நகரிலேயே அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு என்ன காரணம்?


சுமார் 7 மாதங்களுக்கு முன் சென்னையில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த வழக்கிற்காக பெரியார் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


இதுவும் ஒரு சதிதான். சென்னைக்கு கொண்டுபோய் விட்டால் வைக்கம் போராட்டத்தை தொடர முடியாதல்லவா?


ஆனால், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பெரியார் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். கைது நடவடிக் கையை எதிர்த்து தான் வாதிடப் போவதில்லை என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டார்.


ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடியாகிவிடும் என்பதால் மாகாண அரசாங்கமே அவரை விடுவித்து விட்டது.


ராஜாஜி எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டு காந்தி வைக்கம் வந்தார். அவருக்கும் திருவாங்கூர் ராணிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெரியார் அதில் கலந்து கொள்ளவில்லை. அந்த நகரிலிருந்த பயணியர் விடுதியில் தங்கிக் கொண்டார்.
பேச்சுவார்த்தையின்போது, ராணி ஒரு நிபந்தனை விதித்தார்.


“மக்கள் நடமாட சாலைகளையும் வீதிகளையும் திறந்து விட நாங்கள் தயார். ஆனால் அதைச் செய்தவுடன் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்று பெரியார் ரகளை செய்யக் கூடாது”


ராணி இப்படி சொன்னதும், பெரியார் தங்கியிருந்த பயணியர் விடுதிக்கு காந்தி வந்தார். ராணியின் கருத்தை தெரிவித்தார்.


“கோவில் நுழைவு என்பது காங்கிரஸின் லட்சியமாக இல்லாமல் இருக்கலாம். அது எனது லட்சியம். அதை நான் விட்டுத் தரமுடியாது. ஆனால், இப்போதைக்கு அதுபோன்ற கிளர்ச்சி எதுவும் இருக்காது. மக்களுக்கு புரியும்படி பிரச்சாரம் செய்தபிறகு கிளர்ச்சி தொடங்கப் படலாம்”


பெரியார் இப்படி சொன்னவுடன், காந்தி ராணியிடம் தெரிவித்தார். அதை ஏற்று வைக்கம் நகரில் கோவிலைச் சுற்றிய தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாட தடையில்லை என்று ராணி அறிவித்தார்.


இந்தப் போராட்டம் இந்தியாவிலும், தமிழகத்திலும் பெரியாரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.


தனது போராட்டத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை வைக்கம் நகரில் தங்கியிருந்த பெரியார், ஈரோடு திரும்பினார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியை திரு.வி.க. வழங்கினார். அது நிலைத்தும் விட்டது.


சென்னையில் நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் பேசும்பொழுது தந்தை பெரியார் இப்படி பேசினார்.


“அறப் போராட்டத்தின் நோக்கம் நாய்களும், பன்றிகளும் நடக்கும் தெருவில் நாமும் நடக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதுதான்.”


வைக்கம் போராட்டம்தான் இந்தியாவிலேயே தீண்டாமையையும் சாதிக் கொடுமையையும் எதிர்த்து முதன்முதலாக நடைபெற்ற அறப்போராட்டம் என்று வரலாறு பதிவு செய்துகொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *